ராமநாதபுரத்தில் உள்ள வெளி மாநில தொழிலாளர்கள் 106 பேருக்கு 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 லிட்டர் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசப் பொருள்களை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் இன்று வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ராமநாதபுரத்திற்கு வெளிநாட்டிலிருந்து வந்திருந்த 4 ஆயிரத்து 777 பேரில், ஆயிரத்து 190 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.
ராமநாதபுரத்தில் இதுவரை 45 பேருக்குகரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் 43 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இருவருக்கு மட்டுமே கரோனா வைரஸ் இருந்த நிலையில், அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் மட்டும் 31 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இன்றைய தினம் வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசியும், ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் எண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை அமைப்புசாரா தொழிலாளர்களான ஆட்டோ ஓட்டுநர்கள், கட்டிட தொழிலாளர்கள் உள்ளிட்டோர் 9 ஆயிரத்து 740 பேரும், வெளி மாநிலத்தைச் சேர்ந்த அமைப்புசாரா தொழிலாளர்கள் 317 பேர் என மொத்தம் 10 ஆயிரத்து 057 பேர் உள்ளனர்.
நிவாரணம் வழங்கிய மாவட்ட ஆட்சியர் இது தவிர்த்து உடல் உழைப்பின் மூலமாக தொழில் செய்துவரும் அமைப்புசாரா தொழிலாளர்கள் 18 ஆயிரத்து 634 பேர் ராமநாதபுரத்தில் உள்ளனர். இவர்களுக்கான நிதி ஒதுக்கப்பட்ட பின் இவர்களுக்கு உடனடியாக வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா அச்சத்தைப் போக்க ஆட்சியர், மருத்துவர்களுடன் காணொலி கலந்துரையாடல்!