கச்சத்தீவு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய காட்சிகள் ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இன்று நடைபெற்ற மீனவர்கள் நல மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.கஸ்டாலின் கச்சத்தீவு குறித்து பேசும்போது, “ஒவ்வொரு முறை மீனவர்கள் தாக்கப்படும்பொழுது மத்திய அரசிற்கு தமிழக அரசு எடுத்துக்காட்டுகிறது. அவர்களும் இலங்கை அரசிடம் பேசுகின்றனர். ஆனால், மீண்டும் இலங்கை அரசு கைது நடவடிக்கையில் ஈடுபடுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும். அதுதான் இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்.
ஒவ்வொரு முறையும் நரேந்திர மோடி சென்னைக்கு வரும்பொழுது கச்சத்தீவு மீட்பது குறித்து கூறி பேசி வருகிறேன். மேலும், பலமுறை கச்சத்தீவு மீட்பது குறித்து கடிதம் எழுதி வருகிறேன்.
திமுக ஆட்சிக்காலத்தில் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதாக வரலாறு தொியாமல் சிலர் கூறி வருகின்றனர். 1971ஆம் ஆண்டு இலங்கை அரசு கச்சத்தீவை உரிமை கொண்டாடிய உடன், அன்றைய முதல்வர் கருணாநிதி கச்சத்தீவு நமது அரசு உரிமை என்பது கூறி ஆதாரங்களை திரட்டுவதற்கு சட்டப் பேராசிரியர் எஸ்.கிருஷ்ணசாமிக்கு உத்தரவிட்டார்.
கச்சத்தீவானது இந்தியாவிற்கே சொந்தமானது என்ற அறிக்கையை 1973 டிசம்பரில் கருணாநிதி வெளியிட்டார். இதனை மீறித்தான் 1974 ஜீன் 26ஆம் நாள் கச்சத்தீவு ஒப்பந்தம் அப்போதைய இந்திய பிரதமரால் போடப்பட்டது. கச்சத்தீவு ஒப்பந்தம் மட்டுமே. சட்டம் இல்லை. அப்படி எந்த ஒரு சட்டமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. அதனை திமுகவும் ஆதரிக்கவில்லை.
கச்சத்தீவு ஒப்பந்தம் நிறைவேறியவுடன் கருணாநிதி உடனடியாக டெல்லி சென்று, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து கச்சத்தீவை இலங்கைக்கு தரக்கூடாது என வலியுறுத்தினார். கச்சத்தீவு நமது சொந்தம் என்று ஆதாரங்களை பிரதமரிடம் கருணாநிதி கொடுத்தார். அன்று சட்ட அமைச்சராக இருந்த சே.மாதவனும் அப்போது உடன் இருந்தார்.
சென்னை திரும்பியவுடன் இதே ஆதாரங்களை வைத்து கருணாநிதி கடிதம் எழுதியுள்ளாா். கச்சத்தீவு என்பது இலங்கை அரசுக்கு உட்பட்ட தீவாக எந்த காலமும் இருந்தது இல்லை. டச்சு, போர்ச்சீக்கிய வரைபடங்கள் கூட அவ்வாறே சொல்கின்றன. 1954இல் இலங்கை வெளியிட்ட வரைபடத்திலும் கச்சத்தீவு அவர்களுடனாது என்று சொல்லப்படவில்லை.
கச்சத்தீவின் பாதை மற்றும் மேற்கு பகுதியில் சங்கு எடுக்கக்கூடிய உரிமை ராமநாதபுரம் ராஜாவுக்கே இருந்தது என்பதை காட்ட ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அங்கு சங்கு எடுத்ததற்காக இலங்கை அரசிற்கு கப்பம் கூட கட்டியது இல்லை. எனவே, கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை எந்த ஒரு சர்வதேச நீதிமன்றத்திலும் நிரூபிக்க முடியும்.
கச்சத்தீவு நம்முடையது என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் திரட்டி மத்திய அரசிற்கு கொடுத்தது கருணாநிதிதான். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுவரண் சிங்யை சந்தித்து ஆதாரங்களை கருணாநிதி கொடுத்துள்ளார். இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்ததன் மூலமாக இந்தியாவிற்கு ஆபத்து இல்லை, தமிழ்நாட்டிற்கே ஆபத்து.
திமுகவின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி மாறன், நாடாளுமன்றத்தில் அன்று கச்சத்தீவு குறித்து பேசியுள்ளார். திமுக உறுப்பினராக இருந்த செழியன் தனது எதிர்ப்பை பதிவு செய்து வெளிநடப்பு செய்துள்ளார். ஒப்பந்தம் கையெழுத்தான 3வது நாள் 29.06.1974இல் சட்டமன்றத்தைக் கூட்டி கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்தாக வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டது.
அன்று அனைத்து கட்சிகளும் ஆதரித்தபோது வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அதிமுகதான். அன்று முதல் இன்று வரை தமிழ்நாட்டுக்கு துரோகம் மட்டுமே செய்கின்றனர். 21.08.1974இல் சட்டமன்றத்தில் கச்சத்தீவை எதிர்த்து சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தது கருணாநிதிதான். கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த வரலாறு எதுவும் தெரியாமல் மாநில அரசான திமுக, இந்தியாவின் ஒரு பகுதியை தாரை வார்த்தது என்று அடிப்படை அறிவு இல்லாமல், குறைந்தபட்ச நேர்மையில்லாமல் பேசுவது வெட்கக்கேடானது, கண்டிக்கத்தக்கது.
கச்சத்தீவு அனுமதி மறுக்கப்படுவது தமிழக பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மறுப்பதாகும். எனவே, இந்திய அரசு இலங்கை அரசுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும். ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்ய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மத்திய அரசு தொடங்கிட வேண்டும்.
பாஜக அரசு இறங்கவில்லை என்றால், அடுத்து நடைபெறக் கூடிய நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமையக்கூடிய புதிய அரசிடம் கச்சத்தீவை மீட்டு எடுக்கக்கூடிய வகையில் திமுக தனது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வோம். கச்சத்தீவை மீட்டெடுத்து தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை காப்போம்” என பேசினார்.
இதையும் படிங்க:தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்!