தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பரமக்குடி அருகே இரு தரப்பினரிடையே மோதல்: வாகனங்கள் எரிப்பு, வீடுகள் சூறை - ராமநாதபுரம் மாவட்ட செய்திகள்

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் கார்கள், டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன; பல வீடுகள் சூறையாடப்பட்டன.

பரமக்குடி அருகே இரு தரப்பினர் மோதல்
பரமக்குடி அருகே இரு தரப்பினர் மோதல்

By

Published : Jun 18, 2021, 6:14 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவுக்குள்பட்ட பாண்டியூர் கிராமத்தில் சாமிதுரை என்பவருக்கும், முத்துராமலிங்கம் என்பவருக்கும் ஏற்கனவே ஊராட்சித் தேர்தலின்போது முன்விரோதம் இருந்துவந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஊரடங்கு காலத்தில் முத்துராமலிங்கம் தரப்பைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் கள்ளத்தனமாக மது விற்பனை செய்துவருவதாக சாமிதுரை தரப்பினர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்து அதன் அடிப்படையில் சதீஷ்குமார் கைதுசெய்யப்பட்டார் எனத் தெரிகிறது.

இந்தநிலையில் பிணையில் வெளியே வந்த சதீஷ்குமார் தரப்பினர் (முத்துராமலிங்கம் தரப்பு) சாமிதுரை தரப்பைச் சேர்ந்த அன்பழகன் உள்பட ஆறு பேரை மண்வெட்டி, கத்தியால் வெட்டி காயப்படுத்தினர்.

இது குறித்து இரு தரப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 15 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் (ஜூன் 17) இரவு முத்துராமலிங்கம் தரப்பைச் சேர்ந்த நபர்கள் சாமி துரையின் சேம்பருக்குச் சென்று அங்கிருந்த சாமிதுரையின் சகோதரர் ராஜாவை வெட்டியுள்ளனர்.

இதனால் கோபமடைந்த சாமிதுரை தரப்பினர் முத்துராமலிங்கம் வசிக்கும் பகுதிக்குச் சென்று, அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள், இரண்டு டிராக்டர்கள், நான்கு இருசக்கர வாகனங்களை எரித்து, முனியாண்டி, தமிழரசன், முத்துராமலிங்கம் உள்பட எட்டு பேரின் வீடுகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. மேலும், தகவல் அறிந்த ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், காவல் துணைக் கண்காணிப்பாளர் வேல்முருகன் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டார்.

இச்சம்பவம் தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த 20 நபர்கள் மீது வழக்குப்பதிந்து ஒன்பது நபர்களைக் கைதுசெய்து நயினார்கோவில் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பாண்டியூர் கிராமத்தில் வாகனங்களுக்குத் தீவைத்து, வீடுகள் சூறையாடப்பட்டன. தொடர்ந்து கிராமம் முழுவதும் பரபரப்பு நிலவிவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details