ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், கரோனா அறிகுறி உள்ளவர்களும் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள கரோனா வார்டில் 600 படுக்கைகள் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், 200 பேர் மட்டுமே சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்டத்தின் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கும், நோய் அறிகுறி உள்ளவர்களுக்கும் முறையான சிகிச்சை அளிப்பதில்லை என்றும், இதனால் நாள்தோறும் ஏராளமானோர் உயிரிழந்து வருவதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆய்வு செய்து தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கரோனா வார்டு என்பதால் அங்கு அலுவலர்கள் முதல் யாரும் ஆய்வுக்குச் சென்றால் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.
இதனைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் இந்த தொடர் புகாருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளது. கரோனா வார்டில் நோயாளிகள் அனைவரையும் துல்லியமாகப் பார்க்கும் வகையிலும், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளையும், பராமரிப்பு, கவனிப்பு முறைகளையும் நேரடியாக கண்காணிக்கும் வகையில் 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கரோனா வார்டு பகுதி முழுவதும் ஒரு இடம் விடுபடாமல் கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று (மே.23) இப்பணிகள் முடிவடையும் என்று கூறப்படுகிறது. இந்த கண்காணிப்பு கேமராக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கரோனா வார்டு, மருத்துவமனை டீன் அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதனால் அவர்கள் அனைவரும் அங்கிருந்தே தேவைப்படும்போது 24 மணி நேரமும் நேரடியாக கண்காணித்து உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும். இதன் மூலம் கரோனா வார்டில் நோயாளிகளுக்கு ஏற்படும் அவலங்களைப் போக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை' அமைச்சர் எச்சரிக்கை!