ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை இன்று மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான வீரராகவ ராவிடம் தாக்கல் செய்தார்.
பின் செய்தியாளரிடம் பேசிய நயினார் நாகேந்திரன் கூறியதாவது,
நாடாளுமன்றத் தேர்தலில் தான் வெற்றி பின்னர் ராமநாதபுரம் மாவட்டத்தின் அடிப்படை பிரச்னைகளான குடிதண்ணீர், மீனவர், விவசாயிகள் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்படும். ராமேஸ்வரத்திற்கு பகல் நேரத்தில் இயங்கக்கூடிய ரயில் சேவை துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 2ஆம் தேதி ராமநாதபுரத்தில் பரப்புரை செய்ய இருப்பதாகவும், அவருடன் சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோரும் பரப்புரை செய்ய உள்ளனர். பரப்புரை தேதி உறுதி செய்த பின் அறிவிக்கப்படும்.
வேட்பு மனுத்தாக்கல் செய்த நயினார் நாகேந்திரன் திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக பாஜக கூட்டணி கட்சி வெற்றி பெறும் என்ற பயத்தினாலே அதிகளவில் எங்கள் கூட்டணியை விமர்சனம் செய்து வருகிறார். தேர்தலில் வெற்றி பெற்ற பின் மத்திய அரசின் நவோதயா பள்ளி, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதன் மூலம் ஏழை மாணவர்கள் தரமான கல்வி கிடைக்கும். அதிமுகவின் ராஜகண்ணப்பன் திமுகவிற்கு ஆதரவு அளிப்பதால் அதிமுக செல்வாக்கு சரிந்ததாக கருதி விட இயலாது என்றும் குறிப்பிட்டார்.