ராமநாதபுரம் மாவட்டத்தில் சித்திரங்குடி, காஞ்சிரங்குடி, சக்கரக்கோட்டை, தேர்தங்கல், மேல செல்வனூர்-கீழ செல்வனூர் என ஐந்து பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை ஆசிய, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பறவைகள் வந்து, கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொரிப்பது வழக்கமாகக் காணப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாகப் போதிய மழைப்பொழிவு இல்லாமல், சரணாலயங்களில் நீர் இல்லாததால் பறவைகள் வரத்து வெகுவாகக் குறைந்து காணப்பட்டது. இதை கருத்தில்கொண்டு மூன்று லட்சம் ரூபாய் மதிப்பில் தேர்தங்கல், மேல செல்வனூர்- கீழச் செல்வனூர் பறவைகள் சரணாலயங்களை வனத்துறையினர் சீரமைத்தனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு நல்ல மழைப்பொழிவு இருந்ததன் காரணமாக தேர்தங்கல், மேல செல்வனூர் பறவைகள் சரணாலயங்கள் நீர் நிறைந்து காணப்பட்டன. இதனால் ஆசியா, ஐரோப்பியாவிலிருந்து இங்குள்ள சரணாலயங்களுக்கு புள்ளி அழகு குலைகிடா, கரண்டி வாயன், நத்தை கொத்தி, நாரை, அரிவாள் மூக்கன் உள்ளிட்ட வெளிநாட்டுப் பறவைகள் அதிக அளவில் வந்துள்ளன.