ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் மீன்வளத்துறை சார்பாக, இந்திய கடல் எல்லைதாண்டி மீன் பிடிப்பது தொடர்பாக மீனவர்களுக்கு விழிப்புணர்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ், 'ராமநாதபுரம் மாவட்டம், ஏறத்தாழ 237 கி.மீ நீளம் கடற்கரை கொண்டதாகும். 180 மீனவக்கிராமங்களில் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மீன்பிடித்தொழிலே பெரும்பான்மை மக்களின் முக்கியத்தொழிலாக உள்ளது. மேலும் இந்திய சர்வதேச கடல் எல்லை அருகாமையில் உள்ளது.
குறிப்பாக, குறைந்தபட்சமாக தனுஷ்கோடியிலிருந்து 9 நாட்டிக்கல் மைல் தொலைவிலும், அதிகபட்சமாக தொண்டியிலிருந்து 24 நாட்டிக்கல் மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, இந்திய கப்பல் படை, கடலோர பாதுகாப்புப்படை, ஐஎன்எஸ் பருந்து மற்றும் மீன்வளத்துறை ஒருங்கிணைந்து மீனவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.