இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு மிக அத்தியாவசிய தேவையான பால், காய்கறிகள், உணவுப்பொருள்கள், மருந்துகள், பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்ட கடைகள், நிறுவனங்களைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் மார்ச் 31ஆம் தேதி வரை கட்டாயம் அடைத்திட வேண்டும். அதனைக் கண்காணிக்க காவல் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை மீறும் கடைகள், நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் அவர், பொதுமக்கள், தனிநபர் சுகாதாரத்தைக் காக்கும் வகையில் தொடர்ந்து சோப்பு, சானிடைசர் பயன்படுத்தி கைகளைக் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளை விடுமுறை நாள்களில் குழுவாகக் கூடி விளையாடுவதைத் தவிர்ப்பது, வெளியில் கூட்டிச்செல்வது உள்ளிட்டவைகளைத் தவிர்க்க வேண்டும்.