ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கருவறையிலுள்ள மூலவர் சிலையை புகைப்படம் எடுத்து கோயில் குருக்கள் பக்தர் ஒருவரிடம் கொடுத்துள்ளார். அதற்கான பெரிய தொகையையும் அந்தப் பக்தரிடம் குருக்கள் வாங்கியுள்ளார். அந்தப் பக்தர் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றியதால், இவ்விவகாரம் பூதாகரமாகியது.
இதனைத் தொடர்ந்து குருக்கள் மீது எதிர்ப்பலை கிளம்பிய நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அக்குருக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோயில் தேவஸ்தான அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கோயில் இணை ஆணையரிடம் புகார் மனுவையும் அவர்கள் வழங்கியுள்ளனர்.
இந்தியாவிலுள்ள நான்கு முக்கிய சிவ திருத்தலங்களில் துவாரகா, பூரி, பத்ரிநாத் ஆகிய மூன்றும் வடக்கே உள்ளன. இதில் தெற்கே அமைந்துள்ள ஒரே சிவதலம் ராமேஸ்வரம் மட்டுமே. அதேபோல் 12 ஜோதிலிங்கத் திருத்தலங்களில் வடக்கே பதினொன்றும், தீர்த்தம், மூர்த்தி, தலம் ஆகிய முப்பெருமை கொண்ட காசிக்கு நிகரான புண்ணியத் திருத்தலமாக தெற்கே அமைந்துள்ள ஒரே திருத்தலமாக ராமேஸ்வரம் விளங்குகிறது.
ராமாயண தொடர்பு கொண்ட தலமாக அழைக்கப்படும் ராமேஸ்வரம், ராமன் (வைணவம்), சிவனை சிவலிங்க வடிவில் (சைவத்தை) பிரதிஷ்டை செய்தார் என்பதால், சைவர்களும் வைணவர்களும் கூடி வழிபடும் இடமாகவும் இது இருக்கிறது. எனவே இந்தியாவிலுள்ள இந்துக் கோயில்களில் ராமநாதசுவாமி கோயில் மிக முக்கியச் சிறப்பைப் பெறுகிறது.