காவல்துறையில் சிறப்பாக குற்றவழக்குகளை விசாரிக்கும் நபர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஆண்டுதோறும் பதக்கங்களை வழங்கி வருகிறது. அதன்படி, 2020ஆம் ஆண்டுக்கான பதக்கப்பட்டியலை கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சகம் அறிவித்தது. அதில், தமிழ்நாட்டில் 5 பெண் ஆய்வாளர்கள் உள்பட 6 பேர் இடம்பெற்றுள்ளனர்.
ஆண்டுதோறும் இவ்விருது அறிவிக்கப்பட்டுவந்தாலும், தமிழ்நாட்டின் தென்மண்டல காவல்துறையிலிருந்து இந்தப் பதக்கப்பட்டியலில் இதுவரை ஒரு பெண் காவலர்கூட இடம்பெற்றதில்லை. இந்தச் சூழ்நிலையில், தென்மண்டலத்தில் இருந்து இந்த பதக்கத்தைப் பெறவுள்ள முதல் பெண் என்ற பெருமையை ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் ஆய்வாளர் ஜான்சி ராணி பெற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது குடும்பமே காவல்துறை குடும்பம்தான். அப்பா, அக்கா, பெரியப்பா, அண்ணன் என பலரும் காவல்துறையில் பணிபுரிந்தனர். அப்பாவை பார்த்து நான் காவல்துறையில் சேரவேண்டுமென விரும்பினேன். 2004ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தல் ஒரு வருடம் பணிபுரிந்தேன். அதன் பின் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்தேன்.
2018ஆம் ஆண்டு அபிராமம் காவல் நிலையத்திற்கு ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று வந்தேன். அப்போதுதான், நான் கொலைவழக்கை முதல் முதலாக விசாரித்தேன். அபிராமம் காவல் நிலையத்துக்குட்பட்ட கீழ் கொடுமலூரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தீ வைத்துக் கொல்லப்பட்டார்.
ஆனால், அது தற்கொலை என்று கூறப்பட்டது. அவரது மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டது. நான் தீவிர விசாரணை செய்தபோது, ஆறுமுகத்தின் மனைவி போதும்பெண்ணு என்பவர் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்த வேல்முருகன் என்பவரின் உதவியுடன் அவரது கணவரை அடித்து தீ வைத்துக் கொலை செய்தது தெரியவந்தது.