ராமநாதபுரத்தில் தர்ப்பணம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடற்கரையில் குவிந்தனர். கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கடலில் புனித நீராடி ராமநாதசுவாமியை தரிசித்தனர். பாதுகாப்புப் பணியில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படை, காவலர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
ராமநாதபுரத்தில் தர்ப்பணம் மேலும் தீயணைப்பு ஊர்தி, மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பணியாளர்கள் நகராட்சி மூலம் 40 குழுக்களாகப் பிரிந்து தூய்மைப் பணியை மேற்கொண்டுவருகின்றனர். இதேபோல் ராமநாதபுரத்தில் உள்ள சேதுக்கரை, நவபாஷான கோயில்களிலும் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற புனித நாட்களில் ஆறு, கடல் போன்ற நீர்நிலைகளில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால், அவர்களின் ஆன்மா சாந்தி அடையும். அதோடு முன்னோர்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
குமரியில் தர்ப்பணம் செய்து புனித நீராடிய பக்தர்கள்
தர்ப்பணம் செய்து நீராடிய பக்தர்கள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்திலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர், 16 கால் மண்டபம் கடற்கரைப் பகுதிகளில் எள், பச்சரிசி, பூ போன்றவற்றால் தர்ப்பணம் செய்து புனித நீராடினர்.
இதையடுத்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டனர். ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு, பகவதி அம்மன் கோயில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5 மணி முதல் மதியம் 1 மணிவரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காசியை விட புண்ணியம் தரும் நாகை காமேஸ்வரம் கடற்கரை
முன்னோர்களுக்கு தர்ப்பணம் இதேபோல், ஆடி அமாவாசையையொட்டி காசியை விட 16 மடங்கு புண்ணியம் தரும் நாகை மாவட்டம், காமேஸ்வரம் கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் இறந்த தங்களது முன்னோர்களுக்கு பிடித்த காய்கறி, உணவுகளை படைத்து நவதானியங்கள் வைத்து யாகம் செய்து பின்னர் திதி கொடுத்து கடலில் புனித நீராடினர்.
மேலும், ஆடி அமாவாசையை முன்னிட்டு, காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகார் சங்கமுக தீர்த்தத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.