ராமநாதபுரம்:எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக மாநில மீன்வளத்துறை அதிகாரி இன்று (ஜூலை 25) தெரிவித்தார். இரண்டு இயந்திரப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள், நேற்று (ஜூலை 24) காலை மீன்பிடிக்கச் சென்றதாகவும், நேற்று இரவு கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து அதிகளவில் நிகழ்ந்து வருகிறது. அவர்கள் கைது செய்வதும், அதன்பின் தமிழ்நாட்டில் இருந்து வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதி மீட்பதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
ராமேஸ்வரம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், புதுக்கோட்டையைச் சேர்ந்த 6 மீனவர்கள், கடலூரைச் சேர்ந்த 2 மீனவர்கள் என மொத்தம் 22 பேர் கடந்த ஜூன் 22ஆம் தேதி இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது இலங்கை கடற்படை போலீசார் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி 22 மீனவர்களை கைது செய்தனர். பின்னர், படகுகளுடன் மீனவர்களையும் இலங்கைக்கு கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையால் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அரசிடம் பேசினார்கள். இந்த நிலையில், ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.