புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா உள்பட்ட குணத்திரான்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுந்தரம்-லதா தம்பதி. இவர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள், இவர்களுக்கு இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள் என நான்கு குழந்தைகள் உள்ளனர். மூத்த மகன் மதன்(19) பட்டயப் படிப்பு படித்துவிட்டு டிரைவராக கோயம்புத்தூரில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் பொங்கல் கொண்டாடுவதற்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். விடுமுறை நாள்கள் என்பதால் கடந்த 24ஆம் தேதி குணத்திரான்பட்டி அருகே உள்ள பட்டமங்கலம் எனும் பகுதியில் இருக்கும் கண்மாயில் மீன் பிடிக்க வலை போடுவதற்காக இரவில் 7 மணியளவில் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். மதன் உடன் சென்ற நால்வரில் இருவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள், இருவர் வேறு ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
கண்மாயில் வலை வீசிவிட்டு சாலை ஓரத்தில் உணவு உட்கொண்டு இருக்கும் பொழுது அப்பகுதியை சேர்ந்த மூர்த்தி, பிரதீப், மெய்யநாதன், மற்றுமொருவர் வந்து "என்னடா (அவர்களின் சாதி பெயரைக் கூறி) நாங்களே டூவீலரில் தான் போறோம் வரோம், ஆனா நீங்க கீழ் சாதி பயலுங்க, டூ-வீலர், கார்-லாம் வச்சு சீன் போடுறீங்களா? உங்களை யாருடா இங்க மீன்பிடிக்க வர சொன்னது எந்திரிங்க என தகாத வார்த்தைகளில் பேசத் தொடங்கியுள்ளனர்.
அதற்கு மதன் இப்படியெல்லாம் பேசாதிங்க அண்ணா என்று கூறியுள்ளார். என்னையே எதிர்த்து பேசுறியா என அசிங்கமான வார்த்தைகள் கூறி அடித்து துன்புறுத்தியுள்ளனர். மதனுடன் வந்த நண்பர்கள் உயிருக்கு பயந்து ஓடிவிட்டனர். பிறகு மதன் அவர்களிடமிருந்து தப்பித்து ஆவுடையார் கோயில் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று கீழே விழுந்து விட்டதாக கூறி காயங்களுக்கு முதலுதவி எடுத்துள்ளார்.
அதன்பின், அமரடக்கி பகுதியிலுள்ள மருந்தகத்தில் மாத்திரை போடுவதற்காக தண்ணீர் வாங்கி குடித்துக் கொண்டிருக்கும் போது இரவு சுமார் 11.30 மணியளவில், மூர்த்தி, பிரதீப், மெய்யநாதன் மற்றுமொருவர் காரில் வந்து மதனை அடித்து இழுத்து கடத்திச் சென்றுள்ளனர்.