புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் யோகா பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கலந்து கொண்டு பயிற்சியினை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றினை பரவாமல் கட்டுப்படுத்திட தூய்மைப்படுத்தும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இன்றைய தினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்திடும் ஒருங்கிணைந்த மருத்துவ முறைகள் குறித்த கருத்தரங்கு தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும் முதற்கட்டமாக இம்மருத்துவமனையில் பணிபுரியும் 50 மருத்துவர்கள், செவிலியருக்கு யோகா, இயற்கை மருத்துவம், மனதை அமைதியாக்கும் பயிற்சிகள், முதுகு தண்டுவடத்தை சீர் செய்யும் பயிற்சிகள், மூக்கு, தொண்டை பகுதியில் நோய் தொற்றை தடுக்கும் மூச்சு பயிற்சிகள், ஆசன முறைகளும், தகுந்த இடைவெளியைப் பின்பற்றி செய்து காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து, மருத்துவர்களுக்கு கபசுரக் குடிநீர், ஜிங்க் மாத்திரைகள், மருத்துவ குறிப்புகள் அடங்கிய கையேடுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு பல்வேறு பரிசோதனைகளுக்காக அன்றாடம் வருகைதரும் மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், தன்னார்வ இரத்த கொடையாளர்கள், ஊடகத் துறையினர் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து பரிசோதனை மற்றும் முடிவுகள் வழங்கும் வகையில் சிறப்பு முன்னுரிமை அட்டைகள் வழங்கப்பட்டன.
மேலும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றி தொடர்ந்து ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:15 வயது சிறுமி வன்புணர்வு: ராஜஸ்தானில் கொடூரம்