இதன்பிறகு நடந்த அரங்க நிகழ்வு தகுந்த இடைவெளியை பின்பற்றி நடைபெற்றது. விழாவிற்கு தலைமை வகித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர். மீனாட்சி சுந்தரம் பேசுகையில், "1972ஆம் ஆண்டு ஸ்வீடன் நகர் ஸ்டாக்ஹோமில் ஜூன் 5ஆம் தேதி நடைபெற்ற மாநாட்டில் உலக அளவில் சுற்றுச்சூழலைப் பேணுவதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இரு ஆண்டுகளுக்குப் பின்பிருந்து ஜூன் 5ஆம் தேதி சுற்றுச்சூழல் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்வாண்டு 'இயற்கைக்கான நேரம்' என்பதை இலக்காக வைத்து பணியாற்றும்படி உலக சுற்றுச்சூழல் நிறுவனம் அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளது. சுற்றுச்சூழலைப் பேணுவது என்பது மரம் நடுவது மட்டும் அல்ல, மாசுகளைத் தடுப்பதும் தான்.
சுற்றுச்சூழலில் இயற்கை, இயந்திரங்கள், சமூகம் என்று மூன்றுவிதமான சுற்றுச்சூழல்கள் உள்ளன. இதில் இயற்கையை யாரும் கட்டுப்படுத்த முடியாது. இயந்திரங்கள் மூலம் வெளியாகும் புகை மற்றும் சாயக் கழிவுகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் தடுப்பதும், சமூக சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும் ஒவ்வொரு தனி மனிதனும் ஈடுபாட்டுடன் செய்ய வேண்டிய விஷயம். அந்தவகையில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக இந்த நிகழ்வினை நடத்தியுள்ளது" என்றார்.