புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊனையூர், மேலூர், முனசந்தை, கோனாபட்டு, போன்ற கிராமங்களின் ஒதுக்குப்புறத்தில் அமைந்துள்ளது ஓர் தனி வீடு. மின்சார வெளிச்சமின்ற கழிப்பறை வசதியின்றி பார்ப்போர் முகம் சுளிப்பது போல் இருக்கும் இந்த வீடு தான் இவ்வூர்களில் மாதவிடாய் பருவம் காணும் பெண்களுக்கான மாளிகை என்று அப்பகுதியினர் சொல்கின்றனர்.
இங்கு இவர்கள் பயன்படுத்தும் தட்டு, டம்ளரை யாரும் தொட மாட்டார்கள். பெண்கள் மாதவிடாய் பருவம் காணும் போது இங்கு தனித்து விடப்படுவர். காலம் காலமாக பின்பற்றி வரும் இந்த முறையை அப்பகுதியினர் முட்டுக்குச்சு என்கிறார்கள். பெண் குழந்தை பருவ வயதை அடைந்தாலும் கர்ப்பிணி பெண் மாதவிடாய் பருவத்தை சந்தித்தாலும் அவர்களுக்கும் இது விதிவிலக்கல்ல.
மாதவிடாய் பெண்களின் பிரச்னை அல்ல இந்த சமூகத்தின் பிரச்னை - சிறப்பு தொகுப்பு மழை காலங்களில் இந்த வீடுகளின் கூரைகள் இடிந்து விழும் வாய்ப்புகள் ஏற்பட்டால் கூட அவர்கள் வீட்டிற்கு அழைத்து செல்லப்படாமல் பேருந்து நிறுத்தம் அல்லது ஊரின் ஒதுக்குப்புறங்களில் தங்க வைக்கப்படுவர். மாதவிடாய் காலங்களில் வீட்டில் இருந்தால் சாமிக்கு ஆகாது என்றும் இப்படி ஒதுங்கி இருப்பதால் எங்களுக்கு எவ்வித வருத்தமும் இல்லை என்றும் இப்பகுதி பெண்கள் சொல்லும் போது வார்த்தைகளுக்கு முன்பு வருத்தம் என்னவோ முந்திக்கொள்கிறது.
பெண்கள் எல்லை தாண்டி பறந்து பல சாதனைகள் படைத்து வரும் இக்காலகட்டத்தில் சாதாரண ஹார்மோன் பிரச்னைக்காக, அவர்களை ஒரு எல்லைக்குள் அடைத்து வைக்கும் இந்த கிராமங்களின் மூட நம்பிக்கைகள் சமூகத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.