கஜா புயல் காரணமாக சில மாவட்டங்களில் ஓரளவுக்கு மழை பெய்தது. ஆனால், நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து உள்ளதால், வறட்சி பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குளங்களும், ஏரிகளும் வறண்டு காணப்படுகின்றன. கோடை வெயில் கடுமையாக இருப்பதாலும், போதிய மழை இல்லாததாலும் விவசாய நிலங்கள் பாலைவனம் போல் காட்சியளிக்கிறது. கால்நடைகளும் குடிநீர் இல்லாமல் நோய்வாய்ப்பட்டு இறந்து வருகின்றன.
சொட்டு நீருக்காக பல மைல் தூரம், அலைந்து திரியும் புதுக்கோட்டை மக்கள்! - water drought
புதுக்கோட்டை: குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் நீன்டநேரம் காத்திருந்து ஊற்றுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வரும் நிலை உள்ளதால், தண்ணீருக்கான வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள பரம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட கடம்பராயன்பட்டியில் உள்ள கண்ணியாக்குளம் என்னும் பகுதிகளில் கிணறு போன்ற சிறிய வகையான ஊற்றுக்கள் அதிகமாக உள்ளன. இவற்றில் தண்ணீர் எடுத்துச்செல்ல சுமார் 5கி.மீ தூரத்திலிருந்து ஏராளமான பெண்கள் உள்படப் பொதுமக்கள் நடந்து வருகின்றனர்.
இந்த ஊற்றுக்களிலும் தண்ணீர் குறைவாக வருவதால் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருந்து தண்ணீர் ஊறிய பிறகு, சிறிய குவளை மூலம் அத்தண்ணீரைக் குடங்களில் நிரப்பி எடுத்துச் செல்லும் நிலையில் உள்ளனர். எனவே, அரசு குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கவும், நிலத்தடி நீரைச் சேமிக்கவும் விரைந்து நடவடிக்கை எடுத்து, மக்களுக்கு இலவசமாக, சுத்தமான குடிநீரை விநியோகம் செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.