புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே உள்ள வடகாடு சேர்வைகாரன் பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ். திருமணமாகாத இளைஞரான ரமேஷ் கடந்த வாரம் ஞாயிறு அன்று அதிகாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். கடந்த ஞாயிறு அன்று உடற்கூறாய்வு முடிந்து வந்த ரமேஷின் உடலை சாலையில் வைத்து புதுக்கோட்டை - சேதுபாவாசத்திரம் நெடுஞ்சாலையில் அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக குற்றவாளியைக் கண்டிபிடிப்பதாக வடகாடு போலீசார் உறுதி அளித்திருந்த நிலையில், ரமேஷின் உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சூழலில் இறந்து போன ரமேஷின் 8ம் நாள் சடங்கு இன்று நடைபெற்ற சூழலில் சடங்கிற்காக வடகாடு வந்த அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள், விபத்தை ஏற்படுத்திய வாகனத்தையும், குற்றவாளியையும் ஒரு வாரத்திற்கும் மேலாகியும் கண்டுபிடிக்காத காவல் துறையினரைக் கண்டித்து புதுக்கோட்டை - சேதுபாவாசத்திரம் நெடுஞ்சாலையில் மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக புதுக்கோட்டை - சேதுபாவாசத்திரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதன் இடையே அவசரமாக கடந்து செல்ல வேண்டிய ஆம்புலன்சிற்கு வழிவிட்டு பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.