தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் குடிநீர் தொட்டியில் மலம்.. புதுக்கோட்டையில் பகீர் சம்பவம் - குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகள்

மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மலம் கழித்து குழந்தைகள் மற்றும் முதியோருக்கு ஒவ்வாமை ஏற்படக் காரணமாக இருந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராமம்
கிராமம்

By

Published : Dec 26, 2022, 5:08 PM IST

Updated : Dec 26, 2022, 8:14 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீரில் மலம் கழித்த கொடூரம் - என்று தணியும் இந்த சாதிய ஒடுக்குமுறை?!

புதுக்கோட்டைமாவட்டம், அன்னவாசல் ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சியில் இறையூர் கிராமம் உள்ளது. கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொட்டியிலிருந்து விநியோகிக்கப்படும் நீரை பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக இந்தப் பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோருக்கு உடலில் ஒவ்வாமை பிரச்னைகள் இருந்துள்ளன. அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், ஒவ்வாமைக்கு தண்ணீரில் கலந்த விஷக் கிருமிகள் தான் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறிய கிராமத்தினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தண்ணீரில் மனிதக் கழிவுகள் மிதந்து கிடந்து உள்ளன. தகவல் ஊர் முழுவதும் பரவி கிராம மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

நீர்தேக்கத்தொட்டி இருக்கும் இடத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் விசிக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், அன்னவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் உள்ளிட்டோர் தொட்டியை ஆய்வு செய்தனர்.

மேலும் கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரையும் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தார். சம்பவம் குறித்து விரைவாக விசாரித்து மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் அட்டூழியம் செய்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

குடிநீர் தொட்டி மற்றும் குழாய்களை விரைந்து சுத்தம் செய்து பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்றும், தொட்டி பகுதியில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் கிராம மக்கள் அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.

பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் குடிநீர் தொட்டியில் மலம்.. புதுக்கோட்டையில் பகீர் சம்பவம்

சம்பவம் குறித்து போராட்டத்தில் கலந்து கொண்ட விசிக ஒன்றியச் செயலாளர் பாண்டியனிடம் தொலைபேசி மூலம், புதுக்கோட்டை ஈடிவி பாரத் செய்தியாளர் பசுபதி கேட்டபோது, பொது மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்த சமூக விரோதிகளை விரைந்து பிடிப்பதாக போலீசார் தெரிவித்ததாகவும், குடிநீர் தொட்டி உள்ள பகுதியில் போதிய பாதுகாப்பு வசதிகளை விரைந்து ஏற்படுத்தித் தர ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறினார்.

இதையும் படிங்க:மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் அனுமதி!

Last Updated : Dec 26, 2022, 8:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details