திரையரங்கில் திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி புதுக்கோட்டை:படத்தில் பணிபுரிந்த நடன இயக்குனர்களுக்கு சம்பளம் வரவில்லை, இசை வெளியீட்டு விழாவிற்கு அனுமதி மறுப்பு,அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி மறுத்து அரசாணை வெளியிட்டது போன்ற நீண்ட தடைகளுக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் இன்று (அக்.19) உலகமெங்கும் வெளியாகியுள்ளது.
இதனால் விஜய் ரசிகர்கள் காலையில் இருந்து திரையரங்குகள் முன் மேளதாளத்துடன் ஆடிப்பாடி கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து லியோ திரைப்படம் வெளியிட்ட திரையரங்குகள் முன்பாக ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், ஆட்டம் பாட்டத்துடன் லியோ திரைப்படத்தை வரவேற்றனர்.
இந்நிலையில், புதுக்கோட்டையில் அவரது தீவிர ரசிகர்களான வெங்கடேஷ் மற்றும் மஞ்சுளா என்ற காதல் ஜோடிக்கு நாளை திருமணம் நடைபெற உள்ள நிலையில், லியோ படம் வெளியானதை முன்னிட்டு திரையரங்கில் மோதிரம் மாற்றி, திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மாப்பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்தவர், வெங்கடேஷ். புதுக்கோட்டை, வடக்கு 3ஆம் வீதியை சேர்ந்தவர் மஞ்சுளா. இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் ஜோடி இருவரும் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர்கள். எனவே, வெங்கடேஷ் நடிகர் விஜய்யின் தலைமையில் தனது திருமணம் நடைபெற வேண்டும் என்ற ஆசையில் இருந்துள்ளார்.
எனவே, லியோ திரைப்படம் வெளியாகும் நேரத்தில், திரைப்படம் முன்பு தனது திருமணத்தை நடத்த வேண்டும் என மாவட்ட விஜய் மக்கள் இயக்கத் தலைவர் பர்வேஸ்ஸிடம் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, ரசிகரின் விருப்பத்தின் பேரில் லியோ திரைப்படம் வெளியான நேரத்தில், மாவட்ட விஜய் மக்கள் இயக்கத் தலைவர் பர்வேஸ் முன்னிலையில், ரசிகர்கள் மத்தியில் திரையில் விஜய் தோன்றும் நேரத்தில், கிறிஸ்தவ முறைப்படி வெங்கடேஷ், மஞ்சுளா காதல் ஜோடி இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, மணப்பெண் மஞ்சுளா பேசுகையில், “ விஜய்யின் முன்னால் மோதிரம் மாற்றிக் கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டதால், இங்கு மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டோம். இந்த நிகழ்வு எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. முதல் காட்சியை பார்த்ததில்லை. தற்பொழுது அது நிறைவேறியுள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், மணமகன் வெங்கடேஷ் பேசுகையில்,” விஜய் முன்பு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆசை. ஆனால் எங்களால் செல்ல முடியாத சூழ்நிலையில், தற்போது லியோ திரைப்படம் திரையிடும் தியேட்டரில் விஜய் தோன்றும் நேரத்தில் திருமணம் செய்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எனக்கு அப்பா, அம்மா எல்லாமே விஜய்தான். நான் அவரது டிரஸ்டின் மூலமாக படித்துள்ளேன். எனவே அவர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம்” என்று கூறினார்.
இதையும் படிங்க:ரசிகர்களுடன் லியோ பார்க்க வந்த லோகேஷ், அனிருத்!