புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியில் மலம் கலந்ததாகப் புகார் எழுந்தது. தமிழ்நாடு முழுவதும் இச்சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
கடந்த 105 நாட்களாக, சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். குறிப்பாக இறையூர், வேங்கைவயல், காவேரி நகர், கீழ முத்துக்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 147 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே தமிழ்நாடு அரசு, நீதிபதி சத்தியமூர்த்தி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது.
இந்நிலையில் சிபிசிஐடி காவல்துறையினர் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு கூடுதல் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், "நாங்கள் கடந்த 105 தினங்களாக 147 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளோம். வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்த தண்ணீரை சோதனை செய்துள்ளோம். சந்தேகத்தின் அடிப்படையில், 11 பேரிடம் டிஎன்ஏ சோதனை நடத்த அனுமதி வழங்க வேண்டும்" என வலியுறுத்தப்பட்டிருந்தது.