தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வேங்கைவயலில் போலீசார் பாதிக்கப்பட்ட மக்களை குற்றத்தை ஒப்புக்கொள்ள வற்புறுத்தியுள்ளனர்'

வேங்கைவயல் சம்பவத்தில் காவல் துறையினர் ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக செயல்பட்டதும், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி வற்புறுத்தியதும், தலித் அறிவுசார் கூட்டமைப்பின் உண்மை கண்டறியும் குழு ஆய்வில் தெரியவந்துள்ளது.

che
che

By

Published : Feb 3, 2023, 8:11 PM IST

Updated : Feb 4, 2023, 5:47 PM IST

சென்னை:புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட இறையூர் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் குடியிருப்புப் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி வெளிச்சத்துக்கு வந்தது. இந்த சம்பவத்தில் மலம் கலந்தவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதனிடையே வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், நீர் தேக்கத்தொட்டியில் மலத்தை கலந்தது தொடர்பாக தலித் அறிவுசார் கூட்டமைப்பு சார்பாக உண்மைக் கண்டறியும் நோக்கில், சம்மந்தப்பட்ட கிராமத்தில் கள ஆய்வு நடத்தப்பட்டது. 11 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் அறிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று(பிப்.3) தலித் அறிவுசார் கூட்டமைப்பின் உண்மை கண்டறியும் குழுவினர் வெளியிட்டனர்.

பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த உண்மை கண்டறியும் குழுவினர் கூறும்போது, "வேங்கைவயல் சம்பவத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்களை நேரில் சென்று சந்தித்திருக்க வேண்டும். அவ்வாறு சந்தித்திருந்தால், இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டில் வேறு எங்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தவிர்த்திருக்க முடியும். ஆனால், இதில் முதலமைச்சரோ அல்லது முக்கிய அமைச்சர்களோ நேரில் சென்று பார்வையிடவில்லை.

இந்த சம்பவத்தில் காவல் துறையினர் மலம் கலந்த ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் சமத்துவப்பொங்கல் வைப்பதுபோன்ற மழுப்பும் நடவடிக்கைகளையே அரசுத்தரப்பில் செய்தனர். அனைத்திற்கும் மேலாகப் பாதிக்கப்பட்ட மக்களையே காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளனர்.

தீண்டாமையை கடைப்பிடிப்பவர்களை தண்டிப்பது என்பது அரசின் கடமை. நீரில் மலம் கலந்த குற்றவாளிகளைத் தண்டிப்பதால், வரும் காலங்களில் இது போன்ற செயல்களை செய்ய நினைக்கும் ஆதிக்க சாதியினருக்கு பயம் ஏற்படும். இந்தச் சம்பவத்தில் மாவட்ட ஆட்சியர் இதுவரை குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் அரசின் சலுகைகள் மறுக்கப்பட்டுள்ளன. அங்குள்ள 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் பலமுறை முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்தும் இதுவரை எந்த உதவித்தொகையும் கிடைக்கவில்லை. அந்த கிராமத்தில் 24 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை மேம்பாட்டுத் திட்டம் கொண்டுவரப்பட்டு, அது உயர் சாதியினர் வசிக்கும் பகுதியோடு மட்டும் போடப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் பொதுக்கழிப்பிடம் இல்லை. படித்த இளைஞர்களுக்கு சுயதொழில் உள்ளிட்ட அரசின் திட்டங்களோ, சலுகைகளோ சென்றடையவில்லை.

இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். வேங்கைவயல் கிராமத்திற்கென தனியாக புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, அதன் பராமரிப்பை பட்டியலின மக்களிடமே ஒப்படைக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் வேறு எந்தெந்த இடங்களில் இது போன்ற சாதியக் கொடுமைகள் நடைபெறுகின்றதோ அந்த கிராமங்களுக்கு அரசு அதிகாரிகள் நேரடியாக சென்று புள்ளி விவரங்களை சேகரிக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 9 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பள்ளி மாணவி - எலும்புக்கூடாக கண்டெடுப்பு

Last Updated : Feb 4, 2023, 5:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details