மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன், புதுக்கோட்டையில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள் சார்பில் வரும் 26ஆம் தேதி நடக்கும் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கலந்துகொள்ளும்.
தான் ஒரு விவசாயி என்று கூறிக்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்கு எதிரான இந்தச் சட்டங்களை எதிர்க்காமல் வரவேற்றுள்ளது துரதிர்ஷ்டவசமானது.
மேலும் பாஜக சார்பில் நடத்தப்படும் வேல் ரத யாத்திரை என்பது மத நம்பிக்கைக்காக அல்ல அரசியல் செய்வதற்காகத்தான். தமிழ்நாடு அரசு இந்த யாத்திரைக்குத் தடைவிதித்து இருப்பதாகத் தெரிவித்தாலும் தொடர்ந்து யாத்திரை என்பது நடந்து கொண்டுவருவது இரண்டு கட்சிகளும் சேர்ந்து நடத்தும் நாடகம்.