புதுக்கோட்டை மாவட்டம் வாகைப்பட்டி கிராமத்தில் கடந்த நான்கு வருடத்தில் சிறுநீரக பிரச்னையால் பலரும் உயிரிழந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இவர்களுக்கு எதனால் சிறுநீரக பிரச்னை ஏற்படுகிறது, ஏன் இந்த உயிரிழப்புகள், அக்கிராமத்தில் மறைந்திருக்கும் மர்மம் என்ன என்பது கேள்விக்குறியாகவே இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி ஈடிவி பாரத் செய்தியாளர் வாகைப்பட்டி கிராமத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்து அம்மக்களிடம் விசாரித்தபோது அதிர்ந்து போனார்.
தாகம் தீர்க்கும் தண்ணீர் அக்கிராம மக்களின் வாழ்வில் விஷமாக இருந்துள்ளது பேரிடிதான். அங்குள்ள மக்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தோடு தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர். கிடைக்கும் தண்ணீர் விஷம் என்றாலும் அதுதான் அவர்களின் கண்ணீரை போக்க வந்த தேவாமிர்தம்.
இந்தக் கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு தண்ணீர் தொட்டி, குடிநீருக்கான இணைப்புக் குழாய்கள் உள்ளிட்ட வசதிகள் இருந்தும் சுத்தமான குடிநீருக்குத்தான் வழியில்லை.
சுகாதாரமில்லாத தண்ணீரால் தான் இத்தனை உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன என்ற உண்மை புலப்பட்டன. ஒரே ஒரு ஆழ்துளை கிணற்றில் வந்த தண்ணீரை பயன்படுத்தி வந்ததாக தெரிவித்தனர். அதுவும் கடந்த நான்கு ஆண்டுகளில் அடுத்தடுத்து சிறுநீரக பிரச்னையில் ஒவ்வொருவராக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.