புதுக்கோட்டை மாவட்டத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று ’பாதாள சாக்கடை’. கழிவுகளை அகற்றுவதில் மன்னர் காலத்திலேயே வாய்க்கால் பாதாள சாக்கடை வசதிகளை ஏற்படுத்திய மாவட்டம், புதுக்கோட்டை.
இன்று வரையிலும் எவ்விதக் குறைபாடும் இன்றி சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது எந்த மாவட்டங்களிலும் இல்லாத தனிச்சிறப்பு. கடந்த 2014ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாதாள சாக்கடை திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஓரிரு வருடங்களில் விறுவிறுப்பாக மாவட்டத்தில் உள்ள 42 வார்டுகளில் 38 வார்டுகளுக்கும் சுமார் 13 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டது.
மாவட்ட நகராட்சியால் ஒவ்வொரு வீட்டிற்கும் பாதாளசாக்கடை இணைப்பிற்கு 5 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரையில் பணம் வசூல் செய்யப்பட்டது. அந்த பணம் நிர்பந்தத்தின் பேரில்தான் வசூலிக்கப்பட்டது.
இப்படி கட்டாயமாக வசூலித்து கட்டப்பட்ட பாதாள சாக்கடை, அமைத்த ஒரு சில மாதங்களிலேயே கோளாறானது. புதிய பாதாள சாக்கடையில் இருந்து கால்வாய் நீர் சாலைகளில் வழிந்தோடத் தொடங்கி விட்டது.
சாதாரண காலங்களில் கூட சாக்கடை நீரைக் கடந்து விடலாம். ஆனால் மழைக்காலங்களில் சொல்லவா வேண்டும்? வீசும் துர்நாற்றம், கொசுக்களின் ரீங்காரம், அவ்வப்போது மூச்சுத் திணறல் என மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மாவட்டத்தின் 42 வார்டுகளுமே நகரின் மிகவும் முக்கியமான மைய பகுதியாக உள்ளது. ஒரு தெருவில் ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநூறு வரை மக்கள் வசித்துவருகின்றனர். இந்நிலையில் வாடிக்கையாக கழிவுநீர் தேங்குவது பல்வேறு தொற்றுநோய்கள் பரவ வாய்ப்பாக அமையும்.