வீலிங் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்ட இளைஞர்கள்.. புதுக்கோட்டையில் இருவர் கைது! புதுக்கோட்டை:கடந்த நவம்பர் 12 அன்று தீபாவளி பண்டிகை உலகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அப்போது புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சிலர், தங்கள் இருசக்கர வாகனத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை வேகமாக இயக்குவது, வீலிங் செய்வது, பைக்கில் பட்டாசுகளை கட்டிக் கொண்டு சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதனையடுத்து ஆபத்தானமுறையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், புதுக்கோட்டையில் கணேஷ் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட துணைக்கோள் நகரம் சாலையில், கோல்டு நகரச் சேர்ந்த முகமது இர்பான் என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் பட்டாசுகளை கொளுத்தி வீலிங் செய்து, அதனைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதே போல, ஏதிரிப்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ் (24) என்பவர் அன்னவாசல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அன்னவாசல் - கீரனூர் சாலையில் இந்த ஆண்டிற்கு முன் இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் வீலிங் செய்து, அதனை வீடியோவாக இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இதனையடுத்து முகமது இர்பான் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், இருவர் மீதும் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து, அடுத்தகட்ட விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
தற்போது வீலிங் சாகச ஆசையைக் கொண்டுள்ள இளைஞர்கள், அவர்களது எதிர்காலம் மற்றும் அடுத்த தலைமுறையினரைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பான முறையில் வாகனத்தை இயக்குவதை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க:யார் இந்த குரூஸ் பர்ணாந்து? தூத்துக்குடி நகரத் தந்தைக்கு இன்று மணிமண்டபம் திறப்பு!