நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இதுவரை கரோனா பாதிப்பானது 11 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஏழு பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் ஏற்கனவே நான்கு பேர் குணமாகி வீடு திரும்பியிருந்தனர்.
இந்நிலையில் நேற்று மேலும் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் கூறுகையில், ”தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகத்தால் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்கள் அனைவருக்கும் முகக்கவசம் அணிந்து, கட்டாயம் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.