புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன். இவர் செட்டிநாடு கன்ஸ்ட்ரக்சன் எனும் பெயரில் கட்டுமான நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வந்தார். இவருக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ள நிலையில், இவருடைய நிறுவனத்தில் 100-க்கும் மேற்பட்ட கட்டட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் 4 மாதங்களுக்கு முன்பு கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி இரவு அவரும் அவருடைய தாயாருமான சிகப்பு என்பவரும் அடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவம் பொன்னமராவதி பகுதியையே உலுக்கியது. இந்நிலையில் நகை, பணத்திற்காக கொலை செய்யப்பட்டனரா அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக கொலை செய்யப்பட்டனரா என்ற பல கோணத்தில் பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
மேலும் இவ்வழக்கு சம்பந்தமாக புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணன் தலைமையில், சுமார் 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் பொன்னமராவதி காவல் ஆய்வாளர் தனபாலன் சந்தேகத்திற்கு இடமாக இடையபுதூர் பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் கல்லங்களாபட்டி கிராமத்தைச் சேர்ந்த சக்தி (33) மற்றும் தேவகோட்டை அருகே மாவலி கோட்டை கிராமத்தைச் சேர்ந்த அலெக்ஸ் (36) ஆகியோர்களை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர்.
அப்போது அவர்கள் வேந்தன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இன்ஜினியர் பழனியப்பன் மற்றும் அவரது அம்மா சிகப்பி ஆகியோரை நகை மற்றும் பணத்திற்காக கொலை செய்ததை கூறி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் இவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை போலீசார் மீட்டுள்ளனர்.