புதுக்கோட்டை :புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று (ஜூலை 11) ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இதில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த நிலை மற்றும் கூடுதல் நிதி தேவைப்படும் பணிகள் ஆகியவை குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளோடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆய்வு நடத்தினர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு கூறியதாவது, “பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளவிருக்கும் நடை பயணத்திற்கும், ராகுல் காந்தி ஏற்கனவே மேற்கொண்ட நடைபயணத்திற்கும் வேறுபாடுகள் உள்ளது. அண்ணாமலை 10 கிலோ மீட்டர் நடந்தால் என்ன அரசியல் மாற்றம் ஏற்பட போகிறது?” என்றார்.
காங்கிரஸ் பிரதமர் வேட்பாளர்: “நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியைத்தான் பிரதமர் வேட்பாளராக அறிவித்து களமிறங்கப்படுகிறது. தற்போது இதனை எதிர்ப்பவர்கள் தேர்தலுக்குப் பிறகு ராகுல் காந்தியை பிரதமராக ஏற்றுக் கொள்வார்கள்” என கூறினார்.
ஆளுநர் மீது விமர்சனம்: “தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசின் செயல்பாட்டுக்கு முட்டுக்கட்டையாக உள்ளார் என்பதை தெளிவாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் மூலமாக தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்து உள்ளார். குடியரசுத் தலைவர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.