புதுக்கோட்டை:தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சியினரும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை நகராட்சி, நூற்றாண்டு கண்ட நகராட்சி ஆகும். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே புதுக்கோட்டை நகராட்சி உருவாக்கப்பட்டது. புதுக்கோட்டை நகராட்சி தொடங்கப்பட்டு 109 ஆண்டுகளாகிறது.
2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை புதுக்கோட்டை நகராட்சித் தலைவியாக திமுகவைச் சேர்ந்த ராமதிலகம் உடையப்பன் இருந்தார். அதன்பிறகு தற்போதுதான் புதுக்கோட்டை நகராட்சித் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் புதுக்கோட்டை நகராட்சியில் இரண்டாவது பெண் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். புதுக்கோட்டை நகராட்சியைப் பொறுத்தவரை 42 வார்டுகள் உள்ளன. 42 வார்டுகளிலும் மொத்தம் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 669 வாக்காளர்கள் உள்ளனர்.
60 ஆயிரத்து 668 ஆண் வாக்காளர்கள், 64 ஆயிரத்து 984 பெண் வாக்காளர்கள், 17 மூன்றாம் பாலினத்தவர் உள்ளனர். இந்நிலையில் 42 வார்டுகளில் 21 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் நகராட்சித் தலைவர் பதவியும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ள நகராட்சித் தலைவிக்கு அதிக சவால்கள் உள்ளதாக முன்னாள் கவுன்சிலர்கள், அரசியல் கருத்தாளர்கள் தெரிவிக்கின்றனர்.