தற்போது இருக்கும் சூழ்நிலையில் கரோவுக்கு முன் கரோனவுக்குப் பின் என்று பிரிக்கக்கூடிய அளவிற்கு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் விலைவாசி உயர்வு. தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் என வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை விலையும் உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வுக்கு மக்கள்தொகை பெருக்கம்தான் காரணம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேலையில் கரோனா பாதிப்பும் ஒரு காரணமாகிவிட்டது.
என்னதான் அத்தியாவசிய பொருள்கள் நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்தாலும்கூட விவசாயிகளிடமிருந்து வியாபாரிகளுக்குச் செல்லும்போது விலை இரட்டிப்பாகிறது. கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட அத்தியாவசிய விளைபொருள்களின் திருத்த மசோதா அத்தியாவசிய பொருள்களிலிருந்து வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு, எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றை நீக்கியது. ஆனால் இந்த திருத்த மசோதா விவசாயிகளுக்கு அதிக ஆதாயத்தை தரும் என்ற நம்பிக்கையை மத்திய அரசு தெரிவித்தது. இருப்பினும் விவசாயிகளின் நிலை மாறியபாடில்லை.
அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தின்கீழ் (Essential Commodities Amendment Bill) வரும் அனைத்துப் பொருள்களின் விற்பனை, விலை, விநியோகத்தை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது. இது அதன் அதிகபட்ச சில்லறை விலையை (MRP) தீர்மானிக்கிறது. இதனால் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் பட்டியலில் இருக்கும்போதே இத்தகைய விளைபொருள்களின் பதுக்கல் அதிகளவு நடைபெறும் சூழலில், தற்போது அரசே இவற்றை அத்தியாவசிய பொருள்கள் பட்டியலிலிருந்து நீக்குவதால் பதுக்கல் சர்வ சாதாரணமாக நடைபெறும் சூழல் உருவாகிறது.
இந்தச் சட்டத்திருத்தத்தால் விவசாயிகள் விளைபொருள்களை அதிகளவில் சேமித்துவைத்து உரிய விலை கிடைக்கும்போது விற்பனை செய்ய முடியும் என்று அரசு விளக்கம் சொன்னாலும் இது இடைத்தரகர்களின் பதுக்கலுக்கும், விலைவாசி உயர்வுக்குமே, வழிவகுக்கும் என்பதே விவசாயிகளின் கவலையாக இருக்கிறது. இருப்பினும் செப்டம்பர் மாதம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்டது. அத்தியாவசியமாகப் பயன்படும் சில பொருள்களின் தேவை அதிகரிக்கும்போது பொருள்கள் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு இரட்டிப்பாக விலை உயர்வை வியாபாரிகள் உருவாக்குகின்றனர்.
இந்த நிலை மாற மத்திய அரசு வியாபாரிகளுக்கு என விலை நிர்ணய சட்டத்தை கொண்டுவர வேண்டுமென்பதே விவசாயிகள், சமூக செயற்பாட்டாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது. தற்போது 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட எண்ணெய் விலைகூட 135 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதுமட்டுமன்றி பருப்பு வகைகள், தானிய வகைகள், அரிசி என அனைத்துமே 20% விலை உயர்வைக் கண்டுள்ளன. அரிசியின் விலை ஒருபுறம் அதிகரிக்க மற்றொரு புறம் பதுக்கலும், அரசு நெல் கொள்முதலை நிறுத்தமும் செய்துள்ளது.
சரி இந்த விலைவாசி உயர்வு சாமானிய மக்களை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்று அலசும்போது பொதுமக்களின் கருத்தானது அதிர்ச்சியடையச் செய்கிறது. அதாவது, “பண வசதி இருப்பவர்கள் எதை வேண்டுமானாலும் வாங்க முடியும். சாதாரண மக்கள், பாமர மக்கள், ஏழை மக்கள், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டில் 80% இருக்கின்றனர்.