புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல், உச்சநீதிமன்றம் சொன்ன பிறகு முதலமைச்சரைச் சந்தித்து ஆலோசிக்க ஆளுநர் தற்போது அழைப்பு விடுத்துள்ளார். முதலமைச்சர் இப்போது வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருவதனால், அந்தப் பணிகள் முடிந்த பிறகுதான் அவர் சந்திப்பது குறித்துத் தெரியவரும். அரசின் எல்லா மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய பின், ஆளுநர் முதலமைச்சர் சந்தித்து ஆலோசிப்பது என்ன பலன் தரப்போகிறது என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
சிறைகளில் அறிமுகமாகும் வீடியோ கான்பரன்ஸ்:தமிழ்நாட்டிலுள்ள சிறைகளைப் பொறுத்தவரையில், மிகுந்த பாதுகாப்புடன் செயல்பட்டு வருகிறது. அதையும் மீறி சில நேரம் ஒரு சில கைதிகள் தப்பி விடுகின்றனர். தப்பிச்சென்ற கைதியை விரைவில் நாங்கள் கைது செய்து விடுவோம். முதல் கட்டமாகப் பார்வையாளர் பகுதி வழியாகத்தான் பெண் கைதி தப்பித்துச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. விரைவில் அவரை கைது செய்து மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார்.
மேலும், சிறைச்சாலைகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் இனி வரும் காலங்களில் சிறையிலுள்ள கைதிகள் அவர்களுடைய குடும்பத்தாருடன் பேசுவதற்கு வீடியோ கான்பரன்ஸ் முறை ஏற்பாடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு உண்டான வசதிகளை எடுத்து வருகிறோம். கைதிகள் தங்களுடைய குடும்பத்தார்கள் எப்படி உள்ளனர் என்பதை அறிந்து கொள்வதற்கும், அவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும் இது நிச்சயம் உதவும்" என்று தெரிவித்தார்.
ஆளுநராக இல்லாமல் பாஜகவின் மாநிலத் தலைவராகச் செயல்படும் தமிழிசை: தொடர்ந்து பேசிய அவர், "திமுகவிற்கு எப்படிப் பேச வேண்டும் என்று தமிழிசை சொல்லித்தர வேண்டியதில்லை. எப்படிப் பேச வேண்டும், எந்த இடத்தில் என்ன பேச வேண்டும் என்பது இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்குத் தெரியும். அவர் தைரியமான கருத்துக்களை முன்வைத்து வருகிறார். அதனைக் கண்டு அச்சமடைவதால் தமிழிசை சௌந்தரராஜன் இது போன்ற கருத்துக்களைக் கூறி வருகிறார். தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநராகப் பதவியேற்ற பின்னர், தற்போதும் தமிழ்நாடு பாஜகவின் மாநில தலைவராகக் கருதிக் கொண்டு பல்வேறு கருத்துக்களைக் கூறி வருகிறார்" என தமிழிசை சௌந்தரராஜனுக்கு அவரது கண்டனங்களைத் தெரிவித்தார்.
அனுமதி பாஸ் கொடுத்த பாஜக எம்பி மீதான நடவடிக்கை என்ன?:தொடர்ந்து நேற்றைய தினம்(டிச.14) பாராளுமன்றத்தில் நிகழ்ந்த சம்பவம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "உயர் பாதுகாப்புகள் நிறைந்த நாடாளுமன்றத்தில் இரண்டு பேர் அத்துமீறி நுழைந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. எந்த அமைப்பு விசாரணை செய்தாலும் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பான விசாரணையை உரிய முறையில் மேற்கொண்டு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பாஜக எம்பி அவர்களுக்குக் கடிதம் கொடுத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்தும் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தில் நடந்த அசம்பாவிதத்தில் ஈடுபட்டவர்கள் அனைவருமே வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் எவ்வாறு ஒன்றிணைந்தார்கள் என்பது வியக்கத்தக்க ஒன்றாக உள்ளது. 2001ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் இது போன்ற சம்பவம் நடந்த பின்னர், நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. அதேபோன்று 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலிலும் காங்கிரஸ் திமுக கூட்டணி வெற்றி பெறும்" என்றார்.
இதையும் படிங்க:சென்னை சுற்றியுள்ள ஏரிகளின் நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை - அமைச்சர் துரைமுருகன்..!