சென்னை: பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் தொகுப்பு வழங்கக் கடந்த மூன்று தினங்களாக டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (ஜன.10) சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் தொகுப்பை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வரக்கூடிய நிலையில், புதுக்கோட்டை நகர்ப் பகுதிக்குட்பட்ட காமராஜபுரம் 10ஆம் வீதியில் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தமிழக அரசின் ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் தொகுப்பைத் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.
அப்போது, இந்த விழாவில் அமைச்சர் ரகுபதி பேசுகையில், "திராவிட மாடல் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையின் அடிப்படையில், குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் தொகுப்பைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து வழங்கியுள்ளார்.
திராவிட மாடல் கொள்கையை ஏற்காதவர்கள் ஆட்சிக்கு எதிரானவர்கள். திராவிட மாடல் ஆட்சி என்பது ஏழை பணக்காரர்கள் என்ற வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்கும் தேவையானதைத் தமிழக அரசு செய்து வருகிறது. மேடு பள்ளங்களைப் பார்க்காமல் பள்ளத்தில் உள்ளவர்களை மேட்டில் கொண்டு செல்லக்கூடிய ஆட்சி நடைபெற்று வருகிறது" என்று பேசினார்.