புதுக்கோட்டை: கீரனூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் யுவராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது, “மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் கிடையாது என்று முதலமைச்சர் தொடர்ந்து கூறிவரும் நிலையில், அரசியல் காரணங்களுக்காக திமுகவினர் விவசாயிகள் பிரச்னையை கையிலெடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ், அதிமுக கூட்டணியில் உரிய இடங்களை கேட்டுப் பெறும். மக்கள் ஒருபோதும் திமுகவையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் ஏற்க மாட்டார்கள். தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள் புயல், மழையால் கடுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளது. மத்திய குழுவும் பார்வையிட்டு சென்றுள்ளது.
மத்திய அரசு உடனடியாக தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை வழங்க வேண்டும். அரசும் விவசாயிகள், பொதுமக்களுக்கு நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால், திமுக கூட்டணிக்கு தான் பாதிப்பு ஏற்படும்.
தமிழ் மாநில காங்கிரஸ் யுவராஜா பேட்டி திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் சிறுபான்மை வாக்குகளை நம்பியுள்ளனர். ரஜினி கட்சி தொடங்கினால் சிறுபான்மை வாக்குகள் ரஜினிக்கு வரும். இதனால் திமுக கூட்டணிக்கு தான் பலத்த அடி விழும். திமுகவில் சில நிர்வாகிகள் தரம் தாழ்ந்து விமர்சித்து வருவது கண்டனத்திற்குரியது.
திமுக நிர்வாகி ராசா முன்னாள், இந்நாள் முதலமைச்சர் மீது தரம் தாழ்ந்த விமர்சனங்களை வெளியிட்டு வருவது கண்டனத்திற்குரியது. உடனடியாக திமுக தலைவர் ஸ்டாலின் ராசாவை கட்டுப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.