புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 'கற்போம் எழுதுவோம் இயக்கம் - புதிய வயதுவந்தோர் கல்வித் திட்டம் 2020-21' என்ற புதிய திட்டத்தின் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, 'தமிழ்நாட்டில் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுதவும், படிக்கவும் தெரியாத கல்லாதோருக்கு, அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் வகையில், தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ், பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் இயக்கத்தின் மூலம் 'கற்போம், எழுதுவோம் இயக்கம்' என்ற புதிய வயதுவந்தோர் கல்வித்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
அந்தவகையில் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாடு முழுவதும் 15 வயதுக்கும்மேற்பட்ட 1.24 கோடி பேர் முற்றிலும் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரையில், 3.19 லட்சம் பேர் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக உள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவை வழங்கினால் மட்டுமே, கல்வியில் ஒட்டுமொத்த வளர்ச்சி என்கிற இலக்கை அடையமுடியும். இதனைக் கருத்தில் கொண்டு முதற்கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில், இதற்காக ஒவ்வொரு கிராமங்கள், வார்டுகள் என்ற அளவில் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களில், அங்கன்வாடி மைங்களில் ஏற்கெனவே பராமரிக்கப்படுகின்ற குடும்ப விவரம், சர்வே பதிவேட்டில் 'கல்வி நிலை' என்கிறப் பகுதியில் உள்ள 15 வயதுக்கும் மேற்பட்ட கல்லாதோரின் விவரங்களை அருகே உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உதவியுடன் கண்டறிந்து, ஆயிரத்து 987 ஆண்கள், ஐந்தாயிரத்து 962 பெண்கள் என மொத்தம் 7,949 பேர் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களை ஒரு மையத்திற்கு 20 பேர் வீதம் 398 கற்றல் மையங்கள், 13 ஒன்றியங்களிலும் ஏற்படுத்தப்பட்டு, தன்னார்வல ஆசிரியர்கள் மூலம் ஒருநாளைக்கு 2 மணிநேரம் எனக் கணக்கீட்டு மாதம் ஒன்றிற்கு 40 மணிநேரம் கற்றல், கற்பித்தல் நடைபெறும். இப்பயிற்சியில் அடிப்படை தமிழ், அடிப்படை கணக்கு மற்றும் சுற்றுச்சூழல் கல்வி ஆகியவை 3 மாதங்கள் கற்றுத்தரப்படும். இறுதியில் சிறுதேர்வு நடத்தப்பட்டு அவர்களின் கற்றல் நிலை சோதிக்கப்படும்.
இதைப்போல் மூன்று கட்டங்கள் நடத்தப்பட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் முற்றிலும் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் இல்லை என்ற நிலையை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.