உலகை உலுக்கும் கரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாமலிருக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இருந்தும் ஊரடங்கால் தினக்கூலிகள், சாலையோர மக்கள் உள்ளிட்டோர் பலர் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது இந்திரா நகர். அப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் அன்றாட வாழ்வாதாரம் மக்கள் கூடுமிடங்களில் பாசி ஊசி மணி விற்பது. அப்படி விற்றும் அதில் வரும் வருமானமே அரை வயிற்றுக்குத்தான் பற்றும்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் அதற்கும் வந்தது ஊரடங்கு என்ற வினை. இவர்களுக்கு பொதுமக்கள் அதிகம் கூடும் கோயில்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள்தான் வியாபாரத்தளம். அந்த வியாபார தளம் கரோனாவால் ஆளில்லாமல் போனது. ஏனென்றால் அரசு யாரும் கூட்டமாக கூடவோ, அத்தியாவசிய தேவைகளின்றி வீட்டைவிட்டு வெளியேரவோ கூடாது என கூறிவிட்டது.
அதனால் அவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதித்துள்ளது. இது குறித்து அவர்கள் கூறுகையில், ஊசி, பாசி மணிகளை மக்கள் கூடுமிடங்களில் விற்று அதில் வருமானம் ஈட்டி பிழைப்பு நடத்திவந்த எங்களுக்கு ஊரடங்கு உத்தரவு காலம் கடினமான காலக்கட்டம்.
வருமானத்திற்கு வழியில்லை, எங்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. வேடிக்கை என்வென்றால் எங்களுக்கு ரேஷன் கார்டு கிடையாது, அரசு எங்களுக்கு வழங்கவில்லை. அதனால் அரசு அளிக்கும் நிவாரணத் தொகை, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களாக் கூடப் பெறமுடியாமல் தவிக்கிறோம்.
வருமானமின்றி தவிக்கும் நரிக்குறவர் இன மக்கள் வெறும் தண்ணீர் மட்டும் அருந்தி எவ்வளவு நாள் உயிர் வாழ்வது. ரெண்டு ரூபா இருந்தா தாங்கய்யா ஊறுகாய் வாங்க என தினமும் உண்ணும் பழைய சோறை மட்டுமே உண்ணும் எங்கள் குழந்தைகளின் கேள்விக்கு கண் களங்குகிறது. எனவே அரசு எங்களுக்கு கருணைக்காட்ட வேண்டும். எங்களுக்கு அத்தியாவசிப் பொருள்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருத்தத்துடன் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:நரிக்குறவர் இன மக்களுக்கு அரிசி, பருப்பு வழங்கிய எம்.எல்.ஏ