புதுக்கோட்டை:விராலிமலை அருகே உள்ள ஒரு கிராமம், கீழ தேராவூர். இந்த கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அதே ஊரைச் சேர்ந்த பெரியசாமி என்பவரது இறுதிச்சடங்கை செய்வதற்கு இடுகாட்டுக்கு அவரது உடல் ஆனது எடுத்துச் செல்லப்பட்டது.
அப்போது இடுகாட்டிற்கு பாதை இல்லாததால் வயல்வெளிகளில் உடலை எடுத்துச்செல்ல வேண்டி இருந்தது. சில நேரங்களில் அந்த வயலின் உரிமையாளர்களும் உடலை எடுத்துச்செல்ல அனுமதி தர மறுக்கின்றனர். இது குறித்து அந்த கிராமப் பகுதி மக்களிடம் கேட்டபோது, “இதர மாதங்களில் யாராவது இறந்தால், அவர்களின் உடலை நாங்கள் எந்த ஒரு பாதிப்பும் இன்றி எடுத்துச்செல்வோம்.
ஆனால், தற்போது விவசாயம் செய்து வருவதால் எங்களால் உடலை இடுகாட்டிற்கு எடுத்துச்செல்ல சிரமமாக உள்ளது. மேலும் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை இதே பாதையில் பயணிக்க வேண்டியது உள்ளதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறோம். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் பாதை அமைத்து தரவில்லை” என்று குமுறுகின்றனர்.
இறுதிச்சடங்கை கூட நிம்மதியாக செய்ய முடியாமல் தவிக்கும் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு இந்தப் பிரச்னையை உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்பதே அந்த கிராமப் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியான சுவாதி; கொண்டாடி வரும் யுவராஜ் ஆதரவாளர்கள்?