புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சின்னஞ்சிறிய கிராமமான சின்ன வீரமங்கலத்தை சேர்ந்தவர்கள், சுப்பிரமணி, முருகேசன், அய்யனார் ஆகியோர். அண்ணன் தம்பிகளான இவர்கள் சேர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு ஏதாவது ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிக்கலாம் என நினைத்தபோது, அந்த ஊரின் நல்ல சமையல்காரரான பெரியவர் பெரியதம்பியை பார்த்துள்ளனர். பின்னர் முத்துமாணிக்கம், தமிழ்ச்செல்வன் என இன்னும் இருவரை கூட சேர்த்துக்கொண்டு தொடங்கப்பட்டதுதான் ‘வில்லேஜ் குக்கிங் சேனல்’.
ஆரம்பத்தில் சிலர் மட்டுமே பார்த்து வந்த இந்த யூடியூப் சேனல், கஜா புயல் முடிந்து கிளம்பிய ஈசல்களை வறுத்து தங்களது யூடியூப் சேனலில் பதிவிட்டதால் அதனை பல்லாயிரம் பேர் பார்த்து பிரபலமானது. அதனைத்தொடர்ந்து வாரம் இரு சமையல் பதிவுகள் என பல புதுமைகளை சமையலிலும், செய்கையிலும் காண்பித்து வந்தனர். இதில் சமைக்கும் பெரியவர் முதல் அனைவரும் வித்தியாசமான உடல்மொழியோடு, ஏற்ற இறக்க உச்சரிப்புகளோடு பேசுவது அனைத்து தரப்பினரையும் வெகுவாகக் கவர்ந்தது.
இவ்வாறாக ஊர் ஊராக பயணித்து சமைத்து பதிவிட்டு வந்தவர்களுக்கு ஒருநாள், கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியிடமிருந்து ஃபோன் வந்தது. ’ராகுல்காந்தியிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறேன். அவருடன் ஃபோட்டோ எடுத்துக் கொள்கிறீர்களா?’ என்று கேட்டுள்ளார் ஜோதிமணி. ஆனால், ராகுல்காந்தியுடன் ஃபோட்டோ எடுத்துக்கொள்வதைவிட அவருக்கு சமைத்து கொடுக்க விரும்புவதாக தெரிவித்தனர் அவர்கள்.
கரூர் விரைந்தது வில்லேஜ் குக்கிங் சேனல் குழு. இடத்தை தேர்வு செய்து தயாராகியிருந்தனர் பெரியவரும் பேரன்களும். ராகுல் காந்தி பிரச்சாரத்திற்காக கருர் வந்திருப்பதால், ஒருவேளை அவர் வர இயலவில்லை என்றாலும் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் என்றிருக்கிறார் ஜோதிமணி எம்பி. மகிழ்ச்சியில் திளைத்திருந்தவர்களுக்கு அதுமுதல் ஏமாற்றம் எட்டிப்பார்த்திருக்கிறது. பின்னர் முன்னரே தீர்மானித்தப்படி காளான் பிரியாணி செய்யத்தொடங்கினர். அப்போது திடீரென வந்த ஒரு காரில் சாதாரண பேண்ட், டி-ஷர்ட்டில் வந்திறங்கினார் ராகுல். வந்தவர் நேராக தனக்கு வந்து கை கொடுத்ததும் மலைத்துப் போய் விட்டதாக தெரிவிக்கிறார் பெரியதம்பி. என் பேரன்களைப் போலவே தன்னிடமும் ராகுல் காந்தி பழகியதாக கூறுகிறார் அவர்.