தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடையாளம் தெரியாத நபர்களால் புளிய மரத்திற்கு தீ வைப்பு! - அன்ன வாசலில் புளியமரத்திற்கு தீ

புதுக்கோட்டை : அன்னவாசல் அருகே கம்பீரமாக இருந்த புளியமரத்திற்கு அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைத்து அழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Aug 29, 2019, 5:07 AM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு கடுமையாக தாக்கிய கஜா புயலில் மாவட்டம் முழுவதும் தென்னை, பலா, மா, தேக்கு, சவுக்கு, சந்தனம் போன்ற பல்வேறு மரங்கள் அடியோடு சாய்ந்தன. இதில் பல நூறு ஆண்டுகளாக கம்பீரமாக நின்றிருந்த ஆலமரங்களும் அடியோடு சாய்ந்தன. மேலும் புதுக்கோட்டையில் இருந்து இலுப்பூர் வரை செல்லும் சாலையில் நின்ற ஏராளமான புளிய மரங்களின் கிளைகள் முறிந்து சாய்ந்தன.

ஆனாலும் அந்த பகுதியில் பல புளிய மரங்கள் புயலையும் தாங்கி கம்பீரமாக நின்றன. இந்நிலையில் கடந்த மாதம் அன்னவாசல் அருகே உள்ள தான்றீஸ்வரம் என்னும் பகுதியில் சாலையோரத்தில் இருந்த பழமையான ஆலமரம் ஒன்றுக்கு அடையாளம் தெரியாத நபர்களால் தீவைத்து எரிக்கப்பட்டது. இதேபோல நேற்று அன்னவாசல் அருகே உள்ள வீரப்பட்டி என்னும் இடத்தில் சாலையோரத்தில் இருந்த பழமை வாய்ந்த புளியமரம் ஒன்றிற்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்பு வீரர்கள், அந்த வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி தீயை அணைத்தனர். இருந்த போதிலும் மரம் முழுவதும் எரிந்து சாம்பலானது.

இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். அப்போது தான் மழையை பெற முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், சாலையோரங்களில் உயிரோடு இருக்கும் பழமையான மரங்கள் இவ்வாறு தீ வைத்து எரிக்கப்படுவது வேதனை அளிக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details