புதுக்கோட்டை: விராலிமலையில் பர்னிச்சர் கடை நடத்திவருபவர் தங்கராஜ். இவர் பணப் பரிவர்த்தனை தொடர்பாக விராலிமலையில் உள்ள எஸ்பிஐ வங்கியில் பணம் செலுத்துவதற்காக மஞ்சள் பையில் வைத்து ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் பணம் எடுத்துச் சென்றுள்ளார்.
அப்போது, ரூ.50 ஆயிரம் பைக்குள் இருந்து தவறி விழுந்தது.
சிசிடிவியில் சிக்கிய நபர்
இதைக் கவனிக்காத தங்கராஜ் வங்கியில் பணம் செலுத்தும் வரிசையில் நின்று பணத்தை செலுத்த முற்பட்டபோதுதான் அவருக்கு ரூ.50 ஆயிரம் பணம் குறைந்தது தெரியவந்தது.
பணத்தை காணோம் என்று பதறிய அவர், ஒருவேளை பணத்தை கடையிலேயே வைத்து விட்டோமோ எனப் பதறிக்கொண்டு கடைக்கு சென்று பார்த்தார். அங்கும் பணம் இல்லை.
இது குறித்து தங்கராஜ் விராலிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத்தொடர்ந்து காவல் துறையினர் வங்கியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது தங்கராஜ் வங்கிக்குள் வருவதும் அவர் பையிலிருந்து ரூ.50 ஆயிரம் பணம் தவறி விழுவதும் அதை குனிந்து ஒருவர் எடுத்து தனது பாக்கெட்டில் வைப்பதும் பதிவாகி இருந்தது.
பணத்தை திரும்ப ஒப்படைத்த வடமாநிலத்தவர் இதையடுத்து, பணத்தை எடுத்தவர் யார்? என்பது குறித்த விசாரணையை காவல் துறையினர் தொடங்கினர். இந்த நிலையில் சிசிடிவி காட்சிப்பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவத் தொடங்கியது.
இதையறிந்த பணத்தை எடுத்துச் சென்ற உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அசோக் என்பவர் பணத்தை தவறவிட்ட தங்கராஜிடம் ரூ. 50 ஆயிரத்தை ஒப்படைத்தார்.
இவர் விராலிமலையில் உள்ள இரும்பு கம்பி தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'குடியிருப்பு பகுதியில் ஒற்றை காட்டுயானை முகாம்'