தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஏட்டு எரிமலை' பாணியில் கடத்தல் கும்பலை கோட்டை விட்ட போலீஸ்.. புதுக்கோட்டையில் நடந்தது என்ன? - கீரனூர் காவல்துறை

சிங்கம் படத்தில் ஏட்டு எரிமலை கடத்தலில் ஈடுபட்டவர்களை கோட்டை விடுவது போல், மாவட்ட காவல் அதிகாரி உத்தரவிட்டும் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்களை கோட்டை விட்ட காவலர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The keeranur police let the ganja smugglers escape in Pudukottai
கடத்தலில் ஈடுபட்டவர்களை கோட்டை விட்ட போலீசார்

By

Published : Jun 16, 2023, 5:22 PM IST

கடத்தலில் ஈடுபட்டவர்களை கோட்டை விட்ட போலீசார்

புதுக்கோட்டை:சூர்யா நடித்த சிங்கம் படத்தில் காவலராக பணிபுரியும் விவேக்கிடம் உயர் அதிகாரி, கடத்தல் லாரி வருகிறது அதை சோதனை செய்ய உத்தரவிடுவார். சோதனை செய்யும் விவேக்கோ, லாரியில் ஒன்றுமில்லை என லாரியை விட்டு விடுவார்.
அங்கு வரும் உயர் அதிகாரியோ, கடத்தியது லாரியைத்தான் என்பார். அந்த மாதிரி ஒரு சம்பவம் தான் புதுக்கோட்டையில் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேற்று முன்தினம், புதுக்கோட்டை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது ஆந்திரா மாநிலம் பதிவு எண் (AP - 39 UB 3440) கொண்ட TATA Yodha சரக்கு வேன் ஒன்று சந்தேகத்திற்கு இடமாக சுற்றியது தெரிய வந்ததுள்ளது.

இதையடுத்து, அந்த சரக்கு வேனை மடக்கி பிடித்து சோதனை செய்ய மாவட்ட தனிப்பிரிவு அலுவலகம் மூலம் அவர் உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் அனைத்து சோதனை சாவடிகள் மற்றும் முக்கிய இடங்களிலும் வாகன சோதனை நடந்துள்ளது. இந்த சோதனையின் போது நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது புதுக்கோட்டை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அம்மாசத்திரம் பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி அருகே சந்தேகத்திற்கு இடமாக சரக்கு வாகனம் ஒன்று வந்தள்ளது. அதையடுத்து, அந்த சரக்கு வாகனத்தை இரவு 8.30 மணியளவில் கீரனூர் போலீசார் பிடித்து சோதனையிட்டுள்ளனர். அப்போது சரக்கு வேனில் இருந்த டிரைவர் மற்றும் அவருடன் இருந்தவர் என இருவரையும் போலீசார் விசாரணை நடத்தி, வேனையும் சோதனை செய்துள்ளனர்.

அப்போது அந்த இருவரும் கீரனூர் போலீசாரிடம் "காய்கறி வண்டி தாங்க சார்" காலையில் வந்து எடுத்துக் கொள்கிறோம் நீங்க வேணா செக் பண்ணிக்கங்க என அசால்டாக பதில் கூறி விட்டு, கஞ்சா பேர் வழிகள் உடனடியாக அங்கிருந்து கம்பி நீட்டி விட்டனர். இதனையடுத்து சரக்கு வேன் முழுவதையும் ஆய்வு செய்த கீரனூர் போலீசார், அந்த வண்டியில் இருந்த ரகசிய அறையை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏனெனில் காய்கறி வண்டி எனக் கூறப்பட்ட அதில், காய்கறி மூட்டைகளை விளக்கிப் பார்த்தபோது 194 கஞ்சா பொட்டலங்கள் மூட்டைகளுடன் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் பின்னர் தாங்கள் ஏமாற்றமடைந்ததை உணர்ந்த கீரனூர் போலீசார், அந்த வண்டி மற்றும் கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும், இதுகுறித்து புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கஞ்சா பண்டல்கள் சரக்கு வேனில் ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடத்தி செல்ல, திருச்சி வழியாக புதுக்கோட்டையில் வந்தது தெரியவந்தது.

தப்பியோடிய இரண்டு பேரும், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கிடையில் சரக்கு வேனின் வாகன பதிவினை வைத்து விசாரித்ததில் அந்த வாகனத்தின் பதிவு எண் உண்மையானது என்பது தெரியவந்துள்ளது.

தப்பியோடிய இரண்டு பேரின் செல்போன் எண்களும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அந்த செல்போன் எண் "ஸ்விட்ச் ஆப்" செய்து வைக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி, தப்பியோடிய நபர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.மாவட்ட அதிகாரி உத்தரவிட்டும், காவலர்களின் அலட்சியத்தில் கஞ்சா கடத்தல் கும்பலை தப்பிக்க விட்டதால் புதுக்கோட்டை மாவட்ட போலீசார் நிம்மதியை இழந்துள்ளனர். மேலும் அந்த கஞ்சா சரக்கு வேனை சோதனையிட்ட காவலர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மறைமுக தகவல்கள் வந்துள்ளது.

இதையும் படிங்க:Manipur Violence: பாஜக எம்பி ராஜ்குமார் ரஞ்சன் வீட்டிற்கு தீ வைப்பு!

ABOUT THE AUTHOR

...view details