புதுக்கோட்டை மாவட்டம் டி.கலபம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகள் ஹரிஷ்மா ஸ்ரீ (17). பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வராததால் வேதனையடைந்த மாணவி, விஷமருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து மாணவியின் தந்தை கணேசன் கூறியதாவது, "ஆதிதிராவிடர் காலனியில் வசிக்கும் எங்களுக்கு நாட்டு நடப்பு கூட சரியாக தெரியாது. என் மகள் சிறுவயதிலிருந்தே நன்றாக படிப்பாள். மருத்துவராக வேண்டும் என்று எங்களிடம் கூறுவாள். பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிந்ததுமே நீட் தேர்வுக்கு தயாராக வேண்டுமென படித்துக்கொண்டே இருந்தாள்.
நீட்தேர்வுக்கு விண்ணப்பம் செய்து ரொம்ப நாளாகியும் ஹால்டிக்கெட் வரும் என எதிர்பார்த்து காத்திருந்தோம். என் மகளுடன் பயிலும் சக மாணவர்களில் சிலருக்கு ஹால்டிக்கெட் வந்துவிட்டது. எனக்கு ஏன் வரவில்லை என மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி அழுதுகொண்டே இருந்தாள். மெயில் ஐடி, பாஸ்வோர்டு மறந்து விட்டதால் எந்த தகவலையும் அறிந்துகொள்ள முடியவில்லை.
வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி விட்டாள். பணக்காரர்களுக்கும், நகரப் பகுதியில் வாழும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த நீட் தேர்வு சாத்தியம். எனது மகளை உதாரணமாகக் கொண்டு அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களுக்கு ஏற்ற கல்வியை வழங்க வேண்டும். என் மகள் உயிர் மீண்டும் வரப்போவதில்லை" என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இதையும் படிங்க:மருத்துவர் கனவில் இருந்த மாணவி நீட் தேர்வால் தற்கொலையா?