புதுக்கோட்டை ஆட்சியர் உமா மகேஸ்வரி தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில், திருச்சி எம்.பி திருநாவுக்கரசர், கரூர் எம்.பி. ஜோதிமாணி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. ஜோதிமணி, "மத்தியில் ஆளும் மோடியின் ஆட்சியில் தொடர்ந்து தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது. அதற்கு எடப்பாடி அரசு துணை போகிறது. கடந்த முறை அமித் ஷா தமிழ்நாடு வந்தபோது, ஊழல் மிகுந்த அரசாக தமிழ்நாட்டை கூறிச் சென்றார். விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் திட்டமான கிசான் திட்டத்தில் இந்தியாவிலேயே ஊழல் நடந்தது தமிழ்நாட்டில் தான்.
ஒரு முதலமைச்சர் உள்துறை அமைச்சரை விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்ற வரலாறு உண்டா? அரசு விழாவில் கூட்டணி அறிவிப்புக்காக விழாவாக நடத்தியதும் இதுதான் முதல் முறை. அதிமுக பொதுக்குழுவை கூட்டி தான் கூட்டணி குறித்து அறிவிப்பு கடந்த காலங்களில் வெளியிட்டு வந்தது. அமைச்சர்கள் செய்த ஊழல் பட்டியல் பாஜகவின் கையில் இருப்பதால், பொதுக்குழுவை கூட்டி ஆலோசிக்காமல் அதிமுக தொண்டர்களின் எண்ணத்தையும் மீறி பாஜகவோடு கூட்டணி என அறிவித்து அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்து விட்டனர்.
திமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் ஆனால், அவர்கள் தமிழ்நாட்டை அடகு வைக்க முடியாது. தமிழ்நாடு பாஜக கொள்கைகளுக்கு எதிரான மாநிலம். எனவே வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்" என்றார்.
இதையும் படிங்க:புயல் குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை - விஜயபாஸ்கர்