புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நம்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது வீட்டில் ஆறு மாதத்திற்கு முன்பு வரை முத்துமணி என்ற கைம்பெண் வேலை செய்துவந்தார்.
இந்நிலையில் சுந்தரமூர்த்தி நடத்தை சரியில்லாததால் வேலைக்குச் செல்வதை முத்துமணி நிறுத்திவிட்டார். இதன்பின்பு சுந்தரமூர்த்தி அவரைப் பலமுறை தொடர்புகொண்டு தனது வீட்டுக்கு வேலைக்கு வருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆனால் முத்துமணி மறுத்துவிடவே, ஆத்திரமடைந்த சுந்தரமூர்த்தி அப்பெண்னின் பதினேழு வயது மகளுக்கு திருமணம் நடைபெற உள்ளதுபோல் போலியாக பத்திரிக்கை அச்சடித்ததோடு, தெரியாத ஒரு நபரின் பெயரை மணமகனாகக் குறிப்பிட்டு, அதனைப் பல்வேறு பகுதிகளுக்கும் பரப்பியுள்ளார்.
மேலும் முத்துமணியின் குடும்பத்தை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அவரது வீட்டிற்கும் பத்திரிக்கையை வைத்துவிட்டு, அவரது வீட்டினுள் இருந்த ஆதார் அட்டை, நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் கார்டு) உள்ளிட்ட ஆவணங்களையும் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து முத்துமணி சுந்தரமூர்த்தியிடம் கேட்டதற்கு அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து இச்சம்பவம் குறித்து முத்துமணி ஆலங்குடி காவல் நிலையத்தில், தனது குடும்பத்தின் பெயரைக் கெடுக்கும்வகையில் தனது சிறுவயது மகளுக்குப் போலியான திருமண பத்திரிக்கை அடித்து அவமானப்படுத்திய சுந்தரமூர்த்தியைக் கைதுசெய்ய வேண்டும் என்று புகார் அளித்தார்.
அப்புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் சுந்தரமூர்த்தி மீது ஆறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:போலீஸ் இன்ஃபார்மர் என நினைத்து இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல்!