காவல் நிலையம் என்றாலே பெரியவர் முதல் சிறியவர் வரை ஒரு வித பயம் தொற்றிக்கொள்ளும். இந்நிலையில், காவல் துறையில் வேலை பார்ப்பவர்களும் நம் சகோதரர்கள்தான் என்பதை விளக்கவும், காவல் நிலையம் குறித்து அறிந்துகொள்ளவும் காவல் துறையினருடன் மாணவர்கள் உரையாடுவதற்கு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது, கிளிக்குடி தாய்த்தமிழ்ப் பள்ளி. அதன்படி அப்பள்ளியின் மாணவ, மாணவியர்கள் களப்பயணமாக அன்னவாசல் காவல் நிலையம் சென்றனர்.
அங்கு, காவல் நிலைய ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், துணை ஆய்வாளர் வீரமணி உள்ளிட்டோர் காவல் நிலைய வாசலில் நின்று மாணவர்களுக்கு கை கொடுத்து வரவேற்றனர். மேலும், காவலர்கள் மாணவர்களுடன் பேசும் போது, 'காவலர்கள் உங்கள் நண்பன்' என்றும்; 'நீங்கள் எங்களை சகோதரர்கள் போல் பார்க்க வேண்டும்' என்றும் அன்பாகப் பேசினார்.
பின்னர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் அறை, சார்பு ஆய்வாளர் அறை, பதிவேடுகள் வைப்பறை, நிலை எழுத்தாளர் அறை, கைதிகள் அறை, கிடங்கு அறை, கணினி அறை, ஆயுதங்கள் அறை, ஆண் கைதிகள் அறை என அனைத்தையும் அழகாக மாணவர்களுக்குப் புரியும் வண்ணம் விளக்கினார். மேலும், அங்கு நடக்கும் பணிகளையும் தெளிவு சுட்டிக்காட்டினார்.