தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துப்பாக்கிச் சுடும் மையங்களில் பாதுகாப்பை உறுதிசெய்ய குழு அமைப்பு - வண்டலூர் காவலர் பயிற்சி மைய இயக்குநர் அமல்ராஜ் தலைமையில் குழு அமைப்பு

தமிழ்நாட்டில் உள்ள துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையங்களில் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வுமேற்கொள்ள வண்டலூர் காவலர் பயிற்சி மைய இயக்குநர் அமல்ராஜ் தலைமையில் குழு ஒன்று அமைத்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

துப்பாக்கி சுடும்
துப்பாக்கி சுடும்

By

Published : Jan 8, 2022, 5:19 PM IST

புதுக்கோட்டை: நார்த்தாமலை பகுதியில் உள்ள காவலர் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை வீரர்கள் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி பயிற்சியில் ஈடுபட்டுவந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாகப் பயிற்சி மையத்திலிருந்து இரண்டு கிமீ தொலைவில் வீட்டில் இருந்த 11 வயது சிறுவன் புகழேந்தி தலையில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார்.

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த சிறுவன் ஜனவரி 3ஆம் தேதி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து விபத்து தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு இன்று (ஜனவரி 8) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், வண்டலூர் காவலர் பயிற்சி மைய இயக்குநர் அமல்ராஜ் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையங்களில் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வுமேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையங்கள் மலைக்குன்றுகள் சூழ்ந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வுசெய்யப்படும். மக்கள் நடமாட்டம் நிறைந்த இடங்களில் அமைந்துள்ள மையங்களின் சுற்றுவட்டார பகுதிகளில் பிரத்யேக தடுப்புகள் எழுப்பி குண்டுகள் வெளியே செல்லாத வண்ணம் தடுப்பு அமைக்கப்படும்.

துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்த இந்தக் குழு ஆலோசனைகளை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டப் போராட்டம் - அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details