ஆன்லைன் ரம்மி விவகாரம் - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுவது என்ன?... புதுக்கோட்டை: இளைஞர் நலன் மேம்பாடு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை இராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அருள்மிகு பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி, "மத்திய அரசு ஆன்லைன் ரம்மி தொடர்பான அறிக்கை வெளியிட்டு, 15 தினங்களுக்குள் கருத்துகளைக் கூற தெரிவித்துள்ளது. அதை நான் இன்னும் படித்துப் பார்க்கவில்லை, படித்துவிட்டு அது குறித்து விளக்கம் கூறுகிறேன்.
ஆன்லைன் ரம்மி, சூதாட்டங்களை நடத்துபவர்களை பாதுகாக்கும் சட்டமாக இருக்கக் கூடாது. தமிழக அரசின் நோக்கம் முழுமையாக ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்பதுதான். வரைவு சட்டத்தை முழுமையாகப் படித்தபின் எங்கள் கருத்தை கூறுகின்றோம்.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. இதனை அடிப்படையாக வைத்து மத்திய அரசு இச்சட்டத்தை கொண்டு வந்தது என்றால் வரவேற்கத்தக்கது. இதனை விட்டு மத்திய அரசு ஆன்லைன் ரம்மி நடத்துபவர்களை பாதுகாக்கும் வகையில் சட்டம் இயற்ற விரும்பினால் அது கண்டிக்கத்தக்கது' என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
மேலும் அவர், ''புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் வருகிற 6ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெறும் காளைகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்வது தான் மிகச்சிறந்தது. அதைப்பற்றி எந்த ஒரு விமர்சனமும் செய்ய வேண்டாம்.
ஜல்லிக்கட்டு போட்டிகள் முழு காப்பீட்டுடன் நடைபெறுகின்றது. அதில் போட்டியை நடத்துபவர்கள் இன்ஸ்யூரன்ஸ் செய்து இருப்பதால் போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் அது பொருந்தும். எனவே தனியாக ஒரு காப்பீடு செய்யத் தேவையில்லை" என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
இதையும் படிங்க:திமுக இளைஞரணியில் 9 பொறுப்பாளர்கள் நியமனம்!