தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கால்நடை நச்சுக்கொடியால் ஏற்படும் விபரீதங்கள் - வெளிவரும் அதிர்ச்சி தகவல்...!

மூடநம்பிக்கையினால் கால்நடை வளர்ப்பாளர்கள் சாலையோரம் ஆங்காங்கேவுள்ள மரங்களில் கட்டிவைக்கும் கால்நடை நச்சுக்கொடிகளினால் ஏற்படும் விபரீதங்கள் குறித்த அதிர்ச்சி தகவலின் சிறப்புத் தொகுப்பு...

superstition-and-disasters-of-livestock-breeders-dot-dot-dot
superstition-and-disasters-of-livestock-breeders-dot-dot-dot

By

Published : Aug 24, 2020, 2:14 AM IST

கால்நடை வளர்ப்பு தற்போது தமிழ்நாட்டில் குறைந்திருந்தாலும் கூட, கால்நடை பண்ணைகளில் பால் உற்பத்திக்காக தொழில்நுட்பத்தையும், அறிவியலையும் பயன்படுத்தி பல யுக்திகளைக் கையாண்டு 12 மாதங்களில் கன்று வளர்ந்து சினைக்கு தயாராகிறது. இந்த உற்பத்தி இயற்கைக்கு மாறானதாக இருந்தாலும் இப்படியெல்லாம் கூட தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதா என நம்மை சற்று புருவத்தை உயர்த்த வைக்கிறது.

நாம் செல்லும் வழியெங்கும் ஒரு சில மரங்களில் சிறு சிறு மூட்டைகள் தொங்க விடப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். ஆனால் அதனை என்னவென்று ஆராய்ந்திருக்க மாட்டோம். அப்படி தொங்கவிடப்பட்டுள்ள பொருளினால் க்யூ ஃபீவர், முழங்கால் வலி, மாரடைப்பு, கை கால் வலி, அசதி போன்றவைகள் மனிதர்களைத் தாக்கும் அபாயம் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் அது உண்மைதான்.

ஏனெனில் அப்படி மரங்களில் தொங்கவிடப்படும் பொருளானது, பசு தனது கன்றை ஈனும் போது வெளிவரும் நச்சுக்கொடி எனப்படும் கழிவுகளைத் தான் ஆங்காங்கே மரத்தில் கட்டித் தொங்கவிடுகின்றன.

தமிழ்நாட்டில் குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புறம் என்ற பாரபட்சமின்றி இந்த நச்சு கொடிகளை ஆலமரத்தில் தொன்று தொட்டு இன்று வரையிலும் கட்டி வருகின்றனர். இதற்கு காரணம் இந்த நச்சுக் கொடிகளை ஆலமரத்தில் கட்டாவிட்டால் "பசு பால் சுரக்காது" என்ற மூடநம்பிக்கையை இன்றும் ஆணித்தரமாக நம்பப்படுவதால் தான்.

குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சுற்றியுள்ள ஆலங்குடி, அறந்தாங்கி, மாங்கோட்டை, திருவரங்குளம், வம்பன் இன்னும் பல்வேறு கிராம பகுதிகளிலும் மற்றும் சாலையோரங்களில் இருக்கக்கூடிய மரங்களிலும் கூட இந்த நச்சுக் கொடிகளைக் கொண்ட முட்டை அதிக அளவில் கட்டப்பட்டுள்ளது.

இதன் துர்நாற்றம் சகிக்க முடியவில்லை என்று கூறும் இப்பகுதி மக்களே, இதனை அவிழ்த்து விட்டாலோ அல்லது அப்புறப்படுத்தினாலோ பசு பால் சுரக்காது என்ற மூட நம்பிக்கையை கூறுவதுதான் வேடிக்கையான ஒன்று.

நாம் வாழும் தொழில்நுட்ப காலக்கட்டத்தில் இதுபோன்ற நம்பிக்கைகள் சாத்தியமா? இதனால் என்ன பாதிப்பு ஏற்படுகிறது? என்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர்.பெரியசாமியிடம் கேட்டபோது, ‘இந்த நச்சுக் கொடிகளை மரத்தில் கட்டும் பழக்கம் காலங்காலமாக இருந்து வருகிறது. இந்த நச்சுக் கொடியை மரத்தில் கட்டுவதால், நாளடைவில் அதிலிருந்து வரும் துர்நாற்றமும், திரவமும் மனிதர்கள் மேல் பட்டாலோ, அந்த துர்நாற்றத்தை நுகர்வதாலோ க்யூ ஃபீவர், பெர்சலோஸிஸ் போன்ற நோய் பரவும் அபாயம் உள்ளது.

கால்நடை நச்சுக்கொடியினால் ஏற்படும் விபரீதங்கள் - வெளிவரும் அதிர்ச்சி தகவல் ...!

இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடிக்கடி காய்ச்சல், சளி, உடல் வலி, மாரடைப்பு, இருமல் போன்ற நோய் தொற்று ஏற்படுகிறது. குறிப்பாக திறந்தவெளியில் மலம், ஜலம் கழிக்க செல்லும் நபர்கள் இந்த மரத்தடியில் ஒதுங்கும் போது, இந்த மூட்டைகளிலிருந்து வழியும் திரவமானது நோய்த்தொற்றை அதிக அளவில் உண்டாக்கி விடுகிறது. இதனால் கரோனா வைரஸ் தாக்குதல் கூட ஏற்படலாம்.

இந்த நச்சுக் கொடிகளால் தான் இந்த நோய் வருகிறது என கண்டறிவது கடினம். இது போன்ற மூட நம்பிக்கைகளை மக்கள் நம்பாமல் வயல் பகுதிகளில் இரண்டு அடிக்கு குழி தோண்டி அதில் இதனை புதைத்து வைத்தால், நோய்த் தொற்றிலிருந்து விடுபடலாம். மனித பிறப்பின் போது வெளிவரும் தொப்புள் கொடியை பதப்படுத்தி வைப்பதன் மூலம் பிற்காலத்தில் ஏற்படும் நோய்க்கு மருந்தாக பயன்படுத்தலாம் என்ற அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த கால்நடைகளின் நச்சுக்கொடியை மீண்டும் மருந்தாக பயன்படுத்த முடியுமா என்ற ஆராய்ச்சிகள் இதுவரை எதுவும் கிடையாது’ என்றும் எச்சரிக்கிறார்.

அதனால் இனி வரும் காலங்களிலாவது பொதுமக்கள் இது போன்ற மூடநம்பிக்கைகளை கைவிட்டு, சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். நம் தலைமுறையினருக்கும் அதனைக் கற்பிக்க வேண்டும் என்பது நம் அனைவருடைய தலையாய கடைமையாகும்.

இதையும் படிங்க:நாட்டுப்பற்று மக்களிடத்தில் ஊறவேண்டும் - சுதந்திரப் போராட்டத் தியாகி அண்ணாமலை

ABOUT THE AUTHOR

...view details