திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25ஆம் தேதி குழந்தை சுஜித், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சம்பவம் தமிழ்நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், அரசின் பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பின் சுஜித்தின் உடல் இறந்த நிலையில் கைப்பற்றப்பட்டது. சுஜித்தின் மீட்பு பணியில் புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த வீரமணி தான் கண்டுபிடித்த கருவியைக் கொண்டு முயற்சித்தார். பின்னர் அந்த முயற்சியும் தோல்வியை தழுவியது.
இது குறித்து பேசிய வீரமணி, "சுஜித் கீழே விழுந்த தகவல் தெரிந்ததும் ஒரு மணி நேரத்தில் இரும்பைக் கொண்டு L வடிவ ஒரு கருவியை வடிவமைத்து அன்று இரவே நடுக்காட்டுப்பாட்டிக்கு நண்பர்களோடு விரைந்தேன். அங்கு சுகாதார துறை அமைச்சரிடம் அனுமதி பெற்று கருவியைப் பற்றி விளக்கமளித்து குழந்தையை மீட்கும் பணியில் இறங்கினோம். சுமார் ஒரு மணி நேரமாக முயற்சி செய்தோம். ஆனால், அப்போது ஆழ்துளை கிணற்றில் பார்த்த பொழுது குழந்தையின் உருவம் தெரியவில்லை. மணல் மூடி இருப்பதுபோல தெரிந்தது. அதனால் குழந்தையை மேலே தூக்குவது சிரமமாக இருந்தது" என்றார்.