தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 25, 2022, 10:49 PM IST

ETV Bharat / state

விளைவித்த கரும்பு இனித்தாலும் விவசாயிகள் வாழ்வில் கசப்பு மாறவில்லை; அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

பொங்கல் தொகுப்பில் கரும்பை சேர்க்க தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கரும்பு விவசாயிகள் முதலமைச்சர் ஸ்டாலுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

வேதனை தெரிவிக்கும் கரும்பு விவசாயிகள்

புதுக்கோட்டை: பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது கரும்பு விவசாயிகளை பெரும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. உடனடியாக தமிழக அரசு மறு பரிசீலனை செய்து பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பையும் சேர்க்க வேண்டுமெனக் கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இலுப்பூர், அன்னவாசல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் அரசு இந்த ஆண்டு தாங்கள் சாகுபடி செய்த கரும்புகளைக் கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தனர்.

இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தில் கரும்பைச் சேர்க்காதது கரும்பு விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் விளைவித்த கரும்பை அரசு கொள்முதல் செய்து கூட்டுறவு அங்காடிகள் மூலம் பொங்கல் தொகுப்பில் விநியோகம் செய்து வந்ததால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அறுவடை செய்த பொங்கல் கரும்புகளை விற்பனை செய்ய முடிந்தது என்றும் தற்போது தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பு தங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அரசு தங்களிடம் நேரடியாகப் பொங்கல் கரும்பைக் கொள்முதல் செய்யாவிட்டால் தாங்கள் விளைவித்த ஒட்டுமொத்த கரும்பையும் விற்க முடியாத சூழலுக்கு தள்ளப்படுவோம் என்றும் 11 மாத காலம் மிகுந்த கஷ்டப்பட்டு கடன் வாங்கி விளைவித்த கரும்புகளை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்து கூட்டுறவு அங்காடிகளில் பொங்கல் தொகுப்போடு சேர்த்து விநியோகம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் கரும்பு விவசாயிகள் நிற்கதியாக நிற்கும் நிலை ஏற்படும் எனவும் கரும்பு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அரசை நம்பி இந்தாண்டு புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர், அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவிலான விவசாயிகள் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டு தற்போது அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில், அரசின் அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். தாங்கள் விளைவிக்கும் கரும்புகள் இனித்தாலும் தங்கள் வாழ்வில் இன்னும் கசப்பு மாறவில்லை என்றும் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இலுப்பூர், மேட்டுச்சாலை, சென்னப்பநாயக்கன்பட்டி, வீரப்பட்டி, அன்னவாசல், சிறுஞ்சுனை, பெருஞ்சுனை, செல்லுக்குடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 1000 ஏக்கர் அளவிற்கு விவசாயிகள் இந்த ஆண்டு பொங்கல் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு விவசாயிகள் விளைவித்த கரும்புகளை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்து கொண்டதால் விற்பனை பிரச்சினை இருக்காது என்ற நம்பிக்கையில் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு இரு மடங்கு அதிகமான பரப்பளவில் விவசாயிகள் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டு தற்போது கரும்புகள் அறுவடைக்குத் தயாராகவுள்ளன.

அதே வேளையில் அரசிடம் இருந்து இன்னும் கொள்முதல் குறித்த அறிவிப்புகள் வராததால் விவசாயிகள் ஏமாற்றத்தோடு காத்திருக்கின்றனர். 10 மாத பயிரான இந்த கரும்பை விளைவிப்பதற்கு ஆட்கள் கூலி, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் என ஏக்கருக்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரையில் செலவாகும். அரசு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அரசிடமிருந்து எந்த விதமான கொள்முதல் அறிவிப்புகளும் வராதது தங்களை அச்சமடைய வைத்துள்ளது. அரசும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் உடனடியாக பொங்கல் கரும்பு கொள்முதல் விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகள் கோரிக்கை:

இது குறித்து சென்னப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஜெயா கூறியபோது, “இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி தாங்கள் விளைவித்த கரும்புகளை அரசு கொள்முதல் செய்தால் மட்டுமே இந்த பொங்கல் தித்திக்கும் மகிழ்வான பொங்கலாக அமையும். அதற்கான உரியத் தீர்வையும் அறிவிப்பையும் அரசு உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்” என்றார்.

வீரப்பட்டிரையைச் சேர்ந்த விவசாயி குமரேசன் கூறியபோது, “2016ஆம் ஆண்டு முதல், பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கப்படுகிறது. இரண்டு அடி முதல் வழங்கப்பட்ட கரும்பு கடந்த ஆண்டு முழு கரும்பாக வழங்கப்பட்டன. இதனால் நாங்கள் அரசை நம்பி கரும்பு சாகுபடி செய்து வந்தோம்.

இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என்று எதிர்பார்த்து எங்களது பகுதியில் பல்வேறு இடங்களில் அதிகளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு கரும்பை அரசு கொள்முதல் செய்யவில்லை. அரசு கொள்முதல் செய்தால் மட்டுமே முழுமையாக விற்பனை செய்ய முடியும். ஆகையால் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பில் கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து விவசாயி கருப்பையா கூறியபோது, “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்குக் கடந்த ஆண்டு கரும்பு, பச்சரிசி, உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டை போலவே குடும்ப அட்டைதாரர்களுக்குக் கரும்பு வழங்குவது குறித்து அரசு அறிவிக்காதது எங்களைப் போன்ற விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. பொங்கல் பரிசுடன் கரும்பும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மேலும், மேட்டுச்சாலையைச் சேர்ந்த வெள்ளைச்சாமி கூறியபோது, “கரும்பு ஓராண்டு கால பயிர், நாங்கள் கடந்த ஆண்டு பொங்கல் முடிந்தவுடன் சாகுபடி செய்தோம் பெரும்பாலான விவசாயிகள் இந்த வருடம் கரும்பு உற்பத்தியைக் குறைத்துக்கொண்டனர்.

அதனால் கரும்புக்கு உரிய விலை கிடைக்குமா என்று தெரியவில்லை. தற்போது அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் கரும்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது நாங்கள் சாகுபடி செய்துள்ள கரும்பை தற்போது சாலையோரங்களில் கம்பு கட்டி விற்கத் தொடங்கியுள்ளோம். விவசாயிகள் அனைவரும் பொங்கலுக்கு 2 அல்லது 3 நாட்கள் உள்ள நிலையில் தான் மொத்தமாக அறுவடை செய்வோம்” என்றார்.

இதையும் படிங்க:TN Govt Pongal Gift: 'சர்க்கரைக்கு பதில் வெல்லம் கொடுங்க' - அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details